ADDED : ஏப் 20, 2026 11:26 PM
பழநி:பழநி தொகுதியில் வாகனங்கள் செல்ல முடியாத மலை கிராமங்களுக்கு கழுதைகள் மூலம் ஓட்டுப்பதிவு இயந்திரங்கள் கொண்டு செல்லப்பட உள்ளது.
தேர்தலையொட்டி பழநி, கொடைக்கானல் பகுதிகளில் உள்ள ஓட்டுச்சாவடி மையங்களுக்கு நாளை(ஏப்.22) பலத்த பாதுகாப்புடன் ஓட்டுப்பதிவு இயந்திரங்கள் அனுப்பி வைக்கப்பட உள்ளன.
கொடைக்கானல் அருகே வெள்ளகவி ஓட்டுச்சாவடி மையத்தில் 249 ஓட்டுகள், பெரியூரில் 148 ஓட்டுகள், சின்னுாரில் 111 ஓட்டுகள் உள்ளன. இந்த மூன்று ஓட்டுச்சாவடிகளும் வாகனங்கள் செல்ல முடியாத பகுதியாக உள்ளதால் ஓட்டுச்சாவடி இயந்திரங்களை கொண்டு செல்வதில் சிரமம் உள்ளது.
குறிப்பிட்ட துாரம் வரை வாகனங்கள் மூலம் சென்று அங்கிருந்து கோவேறு கழுதைகள் மூலம் கொண்டு செல்ல திட்டமிடப்பட்டுள்ளது. ஓட்டுச்சாவடி அலுவலர்கள் நடந்து செல்லும் சூழல் உள்ளது.
திருப்பூர் மாவட்டம் வழியாக மன்னவனுார் ஊராட்சி மஞ்சப்பட்டி ஓட்டுச்சாவடிக்கு கனரக வாகனங்கள் செல்ல முடியும் என்பதால் நான்கு சக்கர வாகனங்கள் மூலம் ஓட்டுப்பதிவு இயந்திரங்கள் கொண்டு செல்ல திட்டமிடப்பட்டுள்ளது.
