‛'லேப்ராஸ்கோப்பி' மூலம் கொடையாளி சிறுநீரகம் அகற்றம்
‛'லேப்ராஸ்கோப்பி' மூலம் கொடையாளி சிறுநீரகம் அகற்றம்
ADDED : நவ 30, 2024 05:45 AM
மதுரை; திண்டுக்கல் வடமலையான் மருத்துவமனையில் முதன்முறையாக 'லேப்ராஸ்கோப்பி' மூலம் கொடையாளியின் சிறுநீரகம், தேனியைச் சேர்ந்த 50 வயது நபருக்கு பொருத்தப்பட்டது.
இம்மருத்துவமனையின் டாக்டர் ஜாப்ரின் நிஷாந்த் கூறியதாவது: தேனியைச் சேர்ந்த 50 வயது நபருக்கு 2 சிறுநீரகங்களும் செயலிழந்தன. உறவுப்பெண் சிறுநீரக தானம் செய்ய முன்வந்தார்.
பரிசோதனையில் நோயாளிக்கு 4 வித ரத்தம் உறையும் திறன் அதிகம் இருப்பது தெரிந்தது. இவருக்கு உறுப்பு மாற்று சிகிச்சை செய்வது கடினம்.
மயக்கவியல் நிபுணர் நரேந்திரகுமார், சிறுநீரக மாற்று அறுவைசிகிச்சை நிபுணர் வெங்கடேஷ், லேப்ராஸ்கோப்பி அறுவைசிகிச்சை நிபுணர் லோகவிஜயன், சிறுநீரக டாக்டர் விவேக் ஆகியோர் 'லேப்ராஸ்கோப்பி' சிகிச்சை மூலம் பெண்ணின் இடது சிறுநீரகத்தை ரத்த சேதமின்றி அகற்றினர்.
அதனை மயக்கவியல் நிபுணர் தேவ்ஆனந்த், இதய அறுவைசிகிச்சை நிபுணர் சத்தியசெல்வம் தலைமையில் ரத்தக்குழாய் அறுவை சிகிச்சை நிபுணர்கள் முரளி, சீனிவாசன், சிறுநீரக மாற்று அறுவை சிகிச்சை நிபுணர் சந்திரமுரளி ஆகியோர் நோயாளிக்கு பொருத்தினர்.
நோயாளி, கொடையாளிக்கு அதிக ரத்த இழப்பு ஏற்படாததால் ரத்தம் செலுத்தவில்லை. அறுவை சிகிச்சை முடிந்த 5வது நிமிடத்தில் பொருத்தப்பட்ட சிறுநீரகத்தில் ரத்தஓட்டம் சீராக பாய்ந்து செயல்பட துவங்கியது. சிறுநீரும் வெளியேறத் துவங்கியது. மூன்றாவது நாள் தானம் செய்த பெண்ணும், 9ம் நாள் நோயாளியும் வீடு திரும்பினர். என்றார்.
மருத்துவமனை தலைவர் புகழகிரி, துணை நிர்வாக இயக்குநர் சந்திரா, முதன்மை செயல் அலுவலர் கார்த்திகேயன் டாக்டர்களை பாராட்டினர்.
