ADDED : பிப் 20, 2025 02:21 AM

திண்டுக்கல்:மழை முடிந்து இயல்பு நிலைக்கு திரும்பியதால் திண்டுக்கல் வெங்காய பேட்டைக்கு சின்ன வெங்காயம் வரத்து அதிகரித்து விலை வீழ்ச்சியடைந்து கிலோ ரூ.70லிருந்து ரூ.45க்கு குறைந்தது. தேவையும் குறைந்ததால் 50 டன் தேக்கமானது.
திண்டுக்கல் சென்னமநாயக்கன்பட்டி அருகே உள்ள வெங்காயபேட்டைக்கு திருப்பூர், நாமக்கல், மைசூர், தேனி உள்ளிட்ட பல்வேறு மாவட்டங்களிலிருந்தும் ஒட்டன்சத்திரம், வேடசந்துார் உள்ளிட்ட பகுதிகளிலிருந்தும் தினமும் 300 டன்னுக்கு மேல் சின்ன வெங்காயம் விற்பனைக்கு கொண்டுவரப்படுகிறது. இங்கிருந்து திண்டுக்கல் சுற்றுப்பகுதிகளில் உள்ள வியாபாரிகள் சில்லறையாகவும், மொத்தமாகவும் வாங்கி சென்று விற்பனை செய்கின்றனர்.
சில நாட்களாக முதல் தர சின்ன வெங்காயம் ரூ.70க்கு விற்பனையானது. தற்போது மழை முடிந்து இயல்பான காலநிலை திரும்பியதால் எல்லா மாவட்டங்களிலும் சின்ன வெங்காய உற்பத்தி அதிகரித்தது. இதனால் திண்டுக்கல் வெங்காய பேட்டைக்கு வழக்கத்தை விட வரத்து அதிகமாக இருந்தது. இதனால் நேற்று சின்ன வெங்காயம் கிலோ ரூ.70 லிருந்து ரூ.45க்கு விற்பனை செய்யப்பட்டது.
தேவையும் குறைவாக இருந்ததால் அதிகமானோர் வாங்கவில்லை. இதனால் கோடவுன்களில் 50 டன்னுக்கும் மேல் சின்ன வெங்காயம் தேக்கமடைந்துள்ளது. இதை பணியாளர்கள் உலர்த்தி பத்திரப்படுத்தும் பணியில் ஈடுபட்டுள்ளனர்.