ADDED : மார் 21, 2025 11:31 PM

ஒட்டன்சத்திரம்; வரத்து அதிகரித்துள்ளதால் திண்டுக்கல் மாவட்டம் ஒட்டன்சத்திரம் மார்க்கெட்டில் முருங்கைக்காய் கிலோ ரூ.30 லிருந்து ரூ.9 ஆக சரிவடைந்ததால் விவசாயிகள் விரக்தி அடைந்துள்ளனர்.
ஒட்டன்சத்திரம் , அம்பிளிக்கை, கப்பலபட்டி, கள்ளிமந்தையம், இடையகோட்டை, மார்க்கம்பட்டி ,திருப்பூர் மாவட்டத்தில் உள்ள தாராபுரம், மூலனுார் பகுதிகளில் முருங்கைக்காய் அதிகமாக பயிரிடப்படுகிறது. தற்போது பல இடங்களில் பறிப்பு மும்முரமாக இருப்பதால் மார்க்கெட்டுக்கு வரத்து அதிகரித்துள்ளது.
பிப்ரவரி முன்பு வரை உள்ளூர் முருங்கை வரத்து இல்லை. இதன்காரணமாக நாசிக் பகுதியில் விளைந்த முருங்கை இங்கு கொண்டுவரப்பட்டு கிலோ ரூ.200க்கு விற்பனையானது. பிப்ரவரியில் உள்ளூர் முருங்கை வரத்து தொடங்கியது. இதனால் பிப்ரவரியில் ஒரு கிலோ ரூ.80க்கு விற்பனை ஆனது. தொடர்ந்து வரத்து அதிகரிக்க விலை குறைய தொடங்கியது. கடந்த வாரம் செடி முருங்கை கிலோ ரூ.30க்கு விற்பனை யானது. நேற்று மேலும் சரிவடைந்து கிலோ ரூ.9க்கு விற்பனை ஆனது. செடிகளில் இருந்து பறித்தெடுக்கும் கூலிக்கு கூட கட்டுபடியாகாது என்பதால் விவசாயிகள் விரக்தி அடைந்துள்ளனர்.