திடக்கழிவு மேலாண்மை திட்ட செயலாக்கத்தில் சுணக்கம்: வழிகாட்டுதல் நெறிமுறைகள் இல்லாததால்...
திடக்கழிவு மேலாண்மை திட்ட செயலாக்கத்தில் சுணக்கம்: வழிகாட்டுதல் நெறிமுறைகள் இல்லாததால்...
UPDATED : செப் 29, 2026 10:30 PM
ADDED : செப் 29, 2026 10:13 PM
திண்டுக்கல்:திடக்கழிவு மேலாண்மை திட்டம் 2026ல் உரிய வழிகாட்டுதல் நெறிமுறைகள் இல்லாததால் திட்ட செயலாக்கத்தில் சுணக்கம் ஏற்பட்டுள்ளது.
மாநிலத்தில் 12,558 கிராம ஊராட்சிகளில் 1 கோடியே 53 லட்சத்து 3 ஆயிரத்து 300 குடியிருப்புகள் உள்ளன. இங்கு திரவக்கழிவுகள் தவிர்த்து நாள்தோறும் சராசரியாக 150 கிராம் திடக்கழிவுகள் ஒரு வீட்டில் சேகரமாகின்றன. மாநிலம் முழுவதும் 74 ஆயிரம் துாய்மைப் பணியாளர்கள் சேகரித்து மக்கும், மக்காத, பிளாஸ்டிக், மருத்துவக்கழிவுகள் என தரம் பிரித்தனர்.
தற்போது 2026 திடக்கழிவு மேலாண்மை விதிமுறைகளில் பொதுமக்களே நான்கு வகை குப்பையாக பிரித்து வழங்க வேண்டும் என வலியுறுத்தப்படுகிறது. இதற்காக உள்ளாட்சிகளில் நான்கு வகை டப்பாக்களும் பொதுமக்களுக்கு வழங்கப்பட்டன.
--
வழிகாட்டுதல் நெறிமுறைகள் இல்லை
ஊரக வளர்ச்சித்துறை அலுவலர்கள் சிலர் கூறியதாவது:
பெரும்பாலான கிராம ஊராட்சிகளில் செயலர்கள், அலுவலர்களின் வீடுகளில் கூட குப்பையை தரம் பிரித்து வழங்குவது குறித்த விழிப்புணர்வு இல்லாத நிலையில் பொதுமக்களும் குப்பையை பிரித்து வழங்காமல் இருக்கும் நிலை தொடர்கிறது.
குப்பையை தரம் பிரித்து வழங்காத அடுக்குமாடி குடியிருப்புகளுக்கு ‛சீல்' வைக்கலாம், அபராதமும் விதிக்கலாம். ஆனால் எத்துறையின் மூலம் இதனை உத்தரவிடுவது என்பது குறித்த முறையான வழிகாட்டுதல் நெறிமுறைகளை அரசு வகுத்து வழங்கவில்லை. உத்தரவுகளை முன்னெடுப்பது உணவு பாதுகாப்புத்துறையா, உள்ளாட்சி அமைப்புகளா, ஊரக வளர்ச்சி முகமையா அல்லது மாசுகட்டுப்பாட்டு வாரியமா என குழப்ப நிலை தொடர்கிறது என்றனர்.
--
கூடுதல் பேட்டரி வாகனங்கள் தேவை
மேலும் அவர்கள் கூறியதாவது: குப்பை சேகரிப்பிற்கு கிராம ஊராட்சிகளில் 6400 பேட்டரி வாகனங்கள் மட்டுமே உள்ளன. ஆனால் 12,558 ஊராட்சிகளில் கூடுதல் பேட்டரி வாகனங்கள் தேவைப்படுகின்றன. தேவை குறித்த பட்டியல் தயாரித்து 'ஜெம்' முனையத்தில் டெண்டர் விடப்பட்டு வாங்கித்தர வேண்டும். ஆனால் கடந்த மூன்று ஆண்டுகளாக ஒரு பேட்டரி கார் கூட கூடுதலாக வாங்கித் தராமல் இருப்பதால் உட்கடை கிராம ஊராட்சிகளில் குப்பை சேகரிப்பில் துாய்மைப் பணியாளர்கள் சிரமத்தை சந்திப்பதும் இன்றளவில் தொடர்கிறது என்றனர்.
