ADDED : மார் 20, 2026 05:14 AM

திண்டுக்கல்: இந்தியாவிலேயே முதல் தேவாங்கு சரணாலயம் திண்டுக்கல் மாவட்டத்தில் துவங்கப்பட்டு உள்ளதால் அது குறித்து விழிப்புணர்வு ஏற்படுத்தவும், தேவாங்குகளின் வாழ்விட பரப்பை அதிகரிக்கும் வகையில் திண்டுக்கல் மாவட்ட சட்டசபை தேர்தல் விழிப்புணர்வு லோகோ மாவட்ட தேர்தல் பார்வையாளர்கள் முன்னிலையில் மாவட்ட தேர்தல் அலுவலரான கலெக்டர் சரவணன் வெளியிட்டார்.
மாவட்டத்தில் உள்ள 7 தொகுதிகளுக்கும் தேர்தல் ஆணையத்தால் நியமிக்கப்பட்ட தேர்தல் பார்வையாளர்கள் நேற்று திண்டுக்கல் வந்தனர்.
கலெக்டர் அலுவலக மினி கூட்டரங்கில் கலெக்டர் சரவணன் தலைமையில் தொகுதி தேர்தல் அலுவலர்கள், உதவி தேர்தல் அலுவலர்களுக்கான அறிமுகக் கூட்டம், ஆலோசனைக் கூட்டம் நடந்தது.
வேடசந்துார் தாலுகா அய்யலுார் கிராமத்தில் அமைக்கப்பட்டு உள்ள இந்தியாவின் முதல் தேவாங்கு சரணாலயத்திற்கு சிறப்பு சேர்க்கும் வகையிலும், தேவாங்குகளின் வாழ்விட பரப்பை அதிகரிக்கும் வகையில் விழிப்புணர்வு ஏற்படுத்தவும் சாம்பல் நிறத்திலான தேவாங்கு லோகோவை தேர்தல் பார்வையாளர்கள் முன்னிலையில் வெளியிட்ட கலெக்டர் அதன் சிறப்புகள் குறித்து பொது பார்வையாளர்களிடம் விளக்கினார்.
தேர்தல் பார்வையாளர்கள் தினேஷ்ஜெயின், அம்ப்ரித் திரிபாதி, சேஷகிரிபாபு, செலவின பார்வையாளர்கள் அஜய்குமார் சுக்லா, வீரேந்திரசிங்தண்டா, முதித்ராய், யோகேஷ்மிஷ்ரா, போலீஸ் பார்வையாளர் சாகர்சிங்கல்சி, ஏழு தொகுதிகளின் தேர்தல் அலுவலர்கள் பங்கேற்றனர்.
