தொகுதி பொது பார்வையாளரை திரும்ப பெற்ற தேர்தல் கமிஷன்
தொகுதி பொது பார்வையாளரை திரும்ப பெற்ற தேர்தல் கமிஷன்
ADDED : மார் 20, 2026 03:02 AM
திண்டுக்கல்: திண்டுக்கல், வேடசந்துார் தொகுதிகளுக்கு பொது பார்வையாளராக சவ்ரப்கவுர் நியமிக்கப்பட்டார். ஆந்திர அரசின் கோரிக்கையை அடுத்து அப்பணியில் இருந்து அவரை தேர்தல் கமிஷன் திரும்ப பெற்றது.
திண்டுக்கல், வேடசந்துார் சட்டசபை தொகுதிகளுக்கான பொது பார்வையாளராக ஆந்திர மாநில சுகாதாரத்துறை செயலாளராக பணிபுரிந்த சவ்ரப்கவுர் நியமிக்கப்பட்டார். ஆந்திராவில் நிலவும் எரிவாயு சிலிண்டர் தட்டுப்பாட்டை சமாளிக்க சவ்ரப்கவுரை திரும்பி அனுப்ப தேர்தல் கமிஷனிடம் அம்மாநில அரசு முறையிட்டது.
இதையடுத்து தேர்தல் கமிஷன் அவரை திரும்ப பெறும் வகையில் தேர்தல் பணியிலிருந்து விடுவித்தது. ஆந்திர தொழிலாளர் நலத்துறை கமிஷனர் சேஷகிரிபாபு திண்டுக்கல், வேடசந்துார் தொகுதிகளின் பொது பார்வையாளராக நியமிக்கப்பட்டார்.
தேனி பார்வையாளர்களும் மாற்றம் நேற்று முன்தினம் தேனி மாவட்ட போலீஸ் பார்வையாளராக ராஜஸ்தானைச் சேர்ந்த ஏ.டி.ஜி.பி., பிபுல்லாகுமார் நியமிக்கப்பட்டார். அவர் தேனி வந்த நிலையில் மாறுதல் வந்ததால் நேற்று முன்தினம் திரும்ப சென்றார்.
ஆண்டிபட்டி, பெரியகுளம் தொகுதிகளுக்கு பொது பார்வையாளராக நியமிக்கப்பட்ட மணிப்பூரைச் சேர்ந்த ஐ.ஏ.எஸ்., அதிகாரி சியாம்லால் புனியா நேற்று முன்தினம் மாலை அரசு விருந்தினர் மாளிகைக்கு வந்தார். அவரையும் உடனே மாற்றி தேர்தல் கமிஷன் உத்தரவிட்டது. இதனால் நேற்று அதிகாலை அவர் தேனியில் இருந்து சென்றார். அலுவலர் ஒருவர் கூறுகையில், ''அவருக்கு பதில் வேறு பார்வையாளர் வருவார்,'' என்றார்.
