தேவாங்குகள் பாதுகாப்புடன் சுற்றுச்சூழல் மேம்பாடு
தேவாங்குகள் பாதுகாப்புடன் சுற்றுச்சூழல் மேம்பாடு
ADDED : மார் 16, 2026 06:34 AM

அய்யலுார் மலைப்பகுதிகளில் வாழும் அரிய வகை பாலுாட்டி இனமான தேவாங்குகளை பாதுகாக்கும் நோக்கில் 'சீட்ஸ்' அறக்கட்டளை சார்பில் 20 லட்சம் மரக்கன்றுகள் நடுவதை இலக்காக கொண்டு பணிகள் நடக்கிறது.
திண்டுக்கல் மாவட்டம் வடமதுரை அருகே அய்யலுார் மலைப்பகுதிகளில் காணப்படும் தேவாங்கு இனத்தை காக்க 'சீட்ஸ்' அறக்கட்டளை தேவாங்குகள் பாதுகாப்பு கூட்டமைப்பை உருவாக்கியது.
ம லைப்பகுதியினருக்கு பல்வேறு உதவி திட்டங்களை செயல்படுத்தி தேவாங்குகளை பாதுகாக்கவும் அவற்றின் மீதான மக்களின் அவநம்பிக்கை பழக்க வழக்கங்களை மாற்றி அமைத்துள்ளது. இப்பகுதி பள்ளி, கல்லுாரி மாணவர்களை தேவாங்கு பாதுகாப்பு துாதுவர்களாக நியமித்து அவர்களது கல்விக்கு உதவிகளை செய்கிறது.
அய்யலுார் வனத்தை சார்ந்த பகுதியில் குறைந்து போன மரங்களின் எண்ணிக்கையை மீட்டுருவாக்கம் செய்ய 'சீட்ஸ்' அறக்கட்டளையின் அய்யலுார் சுற்றுச்சூழல் கல்வி மையம், அய்யனார் அருவி என இரு இடங்களில் நர்சரிகள் அமைத்து மரக்கன்றுகள் வளர்க்கின்றனர். இங்கு நாவல், கொய்யா, மகோகனி, தேக்கு, புங்கன், எலுமிச்சை, முருங்கை, பலா, கொன்னை, வேம்பு, அகத்தி, கரும்பொரசு, பப்பாளி, நெல்லி, பூவரசு, இலவம்பஞ்சு, சித்தக்கத்தி, பாலை, புளி, சீத்தா, கொடுங்காபுளி, வெப்பாலை போன்ற மரக்கன்றுகள் வளர்கின்றன. இவற்றை சுக்காவளி, கிணத்துபட்டி, செங்குளத்துபட்டி, கோம்பை, கணவாய்பட்டி, பஞ்சம்தாங்கி, ப.புதுார், குடகிபட்டி, மாமரத்துபட்டி, செங்குறிச்சி, வலசு, மந்தைகுளத்துபட்டி, குரும்பபட்டி, ஆலாம்பட்டி, புத்துார், பூசாரிபட்டி உள்ளிட்ட மலைப்பகுதிகளில் வசிக்கும் விவசாயிகளை வரவழைத்து பயிற்சி முகாம் நடத்தி மரங்களை வளர்த்து அதிக மகசூல், லாபம் பெற செய்ய வேண்டிய வழிமுறை, ஆலோசனைகள் வழங்கி வருகின்றனர்.
20 லட்சம் மரங்கள் வளர்க்க இலக்கு நிர்ணயம் முத்துச்சாமி, நிறுவனர், சீட்ஸ் அறக்கட்டளை, அய்யலுார் : தேவாங்கு இனம் பாதுகாக்கப்படவும் மழை வளம் பெருகவும் மரங்கள் அவசியம். இதற்காக மலைகள், மலை சார்ந்த விளைநிலங்களில் 20 லட்சம் மரங்களை வளர்க்க இலக்கு நிர்ணயம் செய்து பணிபுரிகிறோம். ஏற்கனவே ஊரான் கரட்டில் உள்ளூர் மக்கள் பங்களிப்புடன் இப்பணியை செய்துள்ளோம். அய்யலுார், அய்யனார் அருவியில் உள்ள எங்களது நர்சரிகளில் வளர்க்கப்படும் மரக்கன்றுகள் மண் வளம், வறட்சியை தாங்கி வளரக்கூடியவை. இதற்காக ரசாயன உரம், பூச்சிக்கொல்லிகளை பயன்படுத்தாமல் அதிக நாட்கள் இடைவெளி விட்டு நீர் பாய்ச்சி வளர்க்கிறோம்.வேளாண்மையும் வனவளமும் நாட்டிற்கு இருகண்கள். விவசாய மக்களின் வாழ்க்கை தரம் மேம்படவும் நில வளங்களை பாதுகாக்கவும் நிலையான நீடித்த வேளாண்மையை உறுதிப்படுத்த வேளாண் காடுகளே சிறந்த வழிமுறை.விவசாய நிலங்களில் மரங்களுடன் வேளாண் பயிர்களை ஒரே நேரத்தில் அல்லது ஒன்றன்பின் ஒன்றாகவோ, ஊடுபயிராகவோ, தனிப்பயிராகவோ, வரப்பு பயிராகவோ பயிரிடுவதே வேளாண் காடாகும். இதனுடன் கால்நடைகளையும் பராமரிக்கலாம்.
மரங்கள் அதிகரிக்கும்போது இப்பகுதியில் வாழும் தேவாங்குகள் பாதுகாக்கப்படும். மழை வளம் அதிகரிக்கும். சுற்றுச்சூழல் மேம்படும். தேவாங்கு இனத்தை காக்க எங்கள் அமைப்பு பணி துவங்கி பல ஆண்டுகளான நிலையில் தற்போது கடவூர், அய்யலுார் மலைப்பகுதிகளை ஒருங்கிணைந்து 11,806 எக்டேர் பரப்பை தேவாங்கு வன உயிரின சரணாலயமாக அறிவித்து பணிகளை செய்கிறது.
சரணாலயத்தின் முகமாக அய்யலுார் பூனைக்கரட்டில் ரூ.16 கோடியில் தேவாங்கு பாதுகாப்பு மையம் துவங்கியிருப்பது மகிழ்ச்சியான விஷயம்.
