/
உள்ளூர் செய்திகள்
/
திண்டுக்கல்
/
தீபாவளிக்கு இறுதிக்கட்ட பர்சேஸ்: மக்கள் வெள்ளம்
/
தீபாவளிக்கு இறுதிக்கட்ட பர்சேஸ்: மக்கள் வெள்ளம்
ADDED : அக் 19, 2025 10:12 PM
திண்டுக்கல்: தீபாவளிக்காக, புத்தாடைகள், இனிப்புகள் வாங்க திண்டுக்கல்லில் கடை வீதியில் பொதுமக்கள் குவிந்தனர். போக்குவரத்து ஸ்தம்பிப்பால் வாகனங்கள் ஊர்ந்தபடி சென்றன.
முக்கிய பண்டிகைகளில் ஒன்றான தீபாவளி இன்று (அக்.20) கொண்டாடப்படுகிறது. இதற்கான உற்சாகம் நேற்றிருந்தே (அக்.19) களைகட்ட துவங்கியது. தீபாவளிக்காக புத்தாடை, பட்டாசு, இனிப்புகள் வாங்க திண்டுக்கல்லில் பஜார்களில் மக்கள் கூட்டம் அலைமோதியது. நகைகள், வீட்டு உபயோக பொருட்களை பண்டிகை கால சலுகை விலையில் வாங்கி குவிக்கவும் மக்கள் கடைகளில் குவிந்திருந்தனர். ரோட்டோரங்களில் போடப்பட்டிருந்த தற்காலிக ஜவுளி கடைகள், செருப்புக்கடைகள், வீட்டு உபயோக பொருட்களை குறைந்த விலைக்கு வாங்க நேற்று மக்கள் அலையென திரண்டிருந்தனர்.
இதனால் திண்டுக்கல் மாநகராட்சி அலுவலக சாலை, கமலாநேரு ஆஸ்பத்திரி சாலை, மெயின் ரோடு, கிழக்கு, மேற்கு ரதவீதிகள், ஏ.எம்.சி.,சாலைகள் மனித தலைகளால் நிரம்பி இருந்தது. சிலநாட்களாக பகல் பொழுதில் மழை பெய்ததால் தீபாவளி வியாபாரம் டல்லடித்து விடுமோ என்ற பயம் வணிகர்களிடம் இருந்தது.
ஆனால் நேற்று மழை ஓய்ந்து இதமான சீதோஷ்ண நிலையுடன் வெயில் அடித்ததால் மாவட்டத்தின் பல பகுதிகளில் இருந்தும் மக்கள் படையெடுத்து வந்திருந்தனர்.
மக்களின் இறுதிக்கட்ட பர்சேஸ்களால் திண்டுக்கல் நகரமே கூட்ட நெரிசலில் ஸ்தம்பித்தது. திண்டுக்கல் பஸ் நிலைய சாலை, மெங்கில்ஸ் ரோடு, சாலை ரோடு, திருச்சி சாலை உள்ளிட்ட நகரின் முக்கிய சாலைகளில் கடும் போக்குவரத்து நெரிசல் ஏற்பட்டது.