ADDED : மார் 14, 2026 07:04 AM
திண்டுக்கல்: சட்டசபை தேர்தல் விழிப்புணர்வு, பாதுகாப்பான ஓட்டுப் பதிவை வலியுறுத்தி திண்டுக்கல்லில் கொடி அணிவகுப்பு நடந்தது.
சட்டசபை தேர்தல் நடக்க உள்ளதையொட்டி தேர்தல் முன்னேற்பாடு பணிகள் தீவிரப்படுத்தப்பட்டுள்ளன. அதன் ஒரு பகுதியாக அந்தந்த மாவட்டங்களில் தேர்தல் பாதுகாப்பு பணியில் ஈடுபடுவதற்காக மத்திய ரிசர்வ் போலீஸ் படை தமிழகத்திற்கு வந்துள்ளது. அதன்படி திண்டுக்கல் மாவட்டத்தில் பதற்றமான ஓட்டுச் சாவடிகள், பகுதிகள், முக்கிய சந்திப்புகள், ஓட்டுப்பதிவு மையங்கள், மாவட்ட எல்லை சோதனை சாவடிகளில் தேர்தல் பணியில் ஈடுபடுவதற்காக ஆந்திர மாநிலம் ராஜமுந்திரியில் இருந்து ஜி-கம்பெனி 42பட்டாலியனை சேர்ந்த துணை கமாண்டர் ராதா தலைமையில் 76 பேர் அடங்கிய மத்திய ரிசர்வ் போலீஸ் படை வந்துள்ளது.
திண்டுக்கல்லில் அமைதியான பாதுகாப்பான ஓட்டுப் பதிவு, ஜனநாயக உரிமை, நுாறு சதவீத ஓட்டுப் பதிவை வலியுறுத்தி மாவட்ட காவல்துறை சார்பில் கொடிஅணிவகுப்பு நிகழ்ச்சி மூன்று இடங்களில் நடந்தது. காட்டாஸ்பத்திரி வ.உ.சி., சிலை முன்பிருந்து தொடங்கிய கொடி அணிவகுப்பை டி.எஸ்.பி.,சுபக்குமார் துவக்கிவைத்தார். இதையடுத்து வாணி விலாஸ் ஜங்ஷன், குடைப்பாறைப்பட்டி உள்ளிட்ட இடங்களிலும் கொடி அணிவகுப்பு நடத்தப் பட்டது.
