ADDED : மார் 27, 2026 08:58 AM

கொடைக்கானல்: கொடைக்கானல், தாண்டிக்குடி மலைப்பகுதியில் வழக்கத்திற்கு மாறாக கோடை வெயிலின் தாக்கம் அதிகரித்துள்ளது. கடந்தாண்டு வடகிழக்கு பருவ மழை சரிவர பெய்யாத நிலையால் சில மாதங்களுக்கு முன்னே நிலத்தடி நீர்மட்டம் பாதிக்க கடும் வறட்சி நிலவுகிறது. இம்மலைப்பகுதியில் பல்லாயிரக்கணக்கான வன நிலங்களில் உள்ள புல், தாவரங்கள் கருகிய நிலையில் எளிதில் தீப்பற்ற கூடிய வகையில் உள்ளன.
இந்நிலையில் நேற்று வில்பட்டி, பள்ளங்கியில் அரசு தரிசு நிலம், பட்டா நிலங்களில் காட்டுத் தீ ஏற்பட்டது. இதை தொடர்ந்து மேல்பள்ளத்திலும் காட்டுத்தீ பரவியது. அரிய வகை மரங்கள் , வன உயிரினங்கள் தீயில் பாதித்தன. அருகில் உள்ள வனப்பகுதியில் தீ பரவாமல் இருக்க வனத்துறையினர் முன்னெச்சரிக்கை நடவடிக்கை எடுத்து வருகின்றனர்.
* தாண்டிக்குடி-- வத்தலக்குண்டு ரோட்டில் கன்னிவாடி வனச்சரகத்திற்கு உட்பட்ட ஆத்துார் நீர்த்தேக்கத்தை யொட்டிய மலைப்பகுதியில் திடீரென காட்டுத்தீ ஏற்பட்டது. வன நிலங்கள் தீக்கிரையாகின. வனத்துறையினர் தீயை அணைக்கும் பணியில் ஈடுபட்டனர். வத்தலக்குண்டு வனப்பகுதியிலும் தீ பரவிய நிலையில் கட்டுப்படுத்தினர். ரோட்டோரம் உள்ள வனப்பகுதியில் காட்டுத்தீ பரவாமல் இருக்க தொடர் கண்காணிப்பில் ஈடுபட்டுள்ளதாக தெரிவித்தனர்.
