ADDED : ஜூன் 24, 2026 01:50 AM

திண்டுக்கல்: திண்டுக்கல் அருகே அலைபேசி செயலி மூலம் பழகி வழிப்பறியில் ஈடுபட்ட நால்வரை தாலுகா போலீசார் கைது செய்தனர்.
திண்டுக்கல் மேட்டுப்பட்டியை சேர்ந்த வாலிபர் ஒருவர் இலவச செயலியான 'கிரைண்டர்'ஐ பதிவிறக்கம் செய்து பலரிடம் நட்பு வட்டத்தை உருவாக்கி பேசி வந்தார். இவரை ,இந்த செயலி வழியே பழகி வந்தவர்கள் ஜூன் 18 இரவு 11:45 மணிக்கு பழநி- - மதுரை ரோட்டில் உள்ள முத்தழகுபட்டி பிரிவுக்கு வருமாறு அழைத்தனர்.இதை நம்பி டூவீலரில் சென்ற வாலிபரை மிரட்டிய 4 பேர் கும்பல் ரூ.2 லட்சம் மதிப்பு டூவீலர், 3 அலைபேசிகளை பறித்துக்கொண்டு தப்பினர். தாலுகா போலீசில் வாலிபர் புகார் செய்தார்.இதுபோல் ஜூன் 20 இரவு 8:30 மணிக்கு திண்டுக்கல்லை சேர்ந்த மற்றொரு நபரையும் இதே போன்று வரவழைத்து 2 அலைபேசிகளை பறித்துள்ளனர். எஸ்.பி., ஜெயக்குமார் உத்தரவில் இன்ஸ்பெக்டர் உலகநாதன், எஸ்.ஐ., அருண் பிரசாத் அடங்கிய தனிப்படை போலீசார் விசாரித்தனர்.
அப்பகுதி சி.சி.டி.வி., கேமரா பதிவுப்படி வழிப்பறியில் ஈடுபட்டது முத்தழகுப்பட்டி நவீன்ராஜா 30, அவரது நண்பர்கள் கிஷோர் வேளாங்கன்னி 26, சார்லஸ் 35, சிறுநாயக்கன்பட்டி நோவா 27, என்பது தெரிந்தது. இவர்களை கைது செய்த தனிப்படையினர் வழிப்பறி செய்த டூவீலர், அலைபேசிகளை பறிமுதல் செய்து நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தி சிறையில் அடைத்தனர்.
