/
உள்ளூர் செய்திகள்
/
திண்டுக்கல்
/
கொட்டகை அமைத்து தருவதாக ரூ.20.80 லட்சம் மோசடி
/
கொட்டகை அமைத்து தருவதாக ரூ.20.80 லட்சம் மோசடி
ADDED : ஜன 28, 2026 06:12 AM

திண்டுக்கல்: திண்டுக்கல் ஊரக வளர்ச்சி முகமையில் பணிபுரிவதாக தெரிவித்து ஊர் மக்களிடம் மானிய விலையில் கால்நடை கொட்டகை அமைத்து தருவதாக ஏமாற்றி 104 பேரிடம் ரூ.20.80 லட்சத்தை பெற்று ஏமாற்றியவரை கைது செய்து பணத்தை மீட்டுத்தர பாதிக்கப்பட்ட மக்கள் கலெக்டர் அலுவலகத்தில் புகார் அளித்தனர்.
ஒட்டன்சத்திரம் தாலுகா புளியமரத்துக்கோட்டை நவ்வாலுாத்தை சேர்ந்த சண்முகம் உள்ளிட்ட 50க்கு மேற்பட்ட பொது மக்கள் கலெக்டர் சரவணனிடம் அளித்த மனுவில், மல்லிகாபுரத்தை சேர்ந்தவர் சக்திவேல். இவர் ஒப்பந்த அடிப்படையில் மாவட்ட ஊரக வளர்ச்சி முகமை அலுவலகத்தில் அரசு ஊழியராக பணியாற்றுவதாக கூறினார். ஆடு, மாடு கொட்டகை அமைக்க மானிய திட்டத்தில் தலா ரூ.20 ஆயிரம் வழங்கினால் , ரூ.1 லட்சம் முதல் ரூ.1.5 லட்சம் மதிப்புள்ள கொட்டகைகளை அமைத்துத் தருவதாக தெரிவித்து 104 பேரிடம் தலா ரூ.20 ஆயிரம் என ரூ.20 லட்சத்து 80 ஆயிரத்தை பெற்றார். கலெக்டர் அலுவலகத்தில் விசாரித்தால் அவர் ஒப்பந்த ஊழியராகக்கூட இல்லை என தெரியவந்ததால் அதிர்ச்சி அடைந்தோம். பணத்தை திருப்பி கேட்டால் கொலை மிரட்டல் விடுக்கிறார். அவரை கைது செய்து பணத்தை பெற்றுத்தர கேட்டுள்ளனர்.
இது போல் பழநி கீரனுார் பேரூராட்சி 3வது வார்டு கக்கன்ஜிநகர் கவுதம் ,கலெக்டர் சரவணனிடம் அளித்த மனுவில், சக்திவேல், முருகேசன் என இருவரும் இணைந்து எங்களது பகுதியில் உள்ள பொது கிணறு, கிணற்றை சுற்றிய இடத்தை ஆக்கிரமித்துத்துள்ளனர். இதை மீட்டுத் தர கேட்டுள்ளார்.
கறிக்கோழி கொள்முதல் நிறுவனங்கள், பண்ணையாளர்களுக்கு இடையிலான கொள்முதல் விலை நிர்ணயம் தொடர்பாக அரசு நிர்வாகம், கறிக்கோழி பண்ணையாளர்கள் பேச்சுவார்த்தை ஜன.21ல் நடந்தது. அதன்படி பண்ணையாளர்களிடம் கருத்துக்கேட்பு கூட்டங்களை நடத்தும் நாட்களின் விபரங்களை முறைப்படி அரசு அறிவிக்க வேண்டும் என தமிழக விவசாயிகள் பாதுகாப்பு சங்கத்தின் மாவட்டச் செயலாளர் ராமகிருஷ்ணன் தலைமையிலான நிர்வாகிகள் திண்டுக்கல் மாவட்ட கால்நடை பராமரிப்புத்துறை இணை இயக்குனர் விஷ்ணுகந்தனிடம் மனு அளித்து அரசுக்கு தெரிவிக்க கோரிக்கை விடுத்தனர்.

