ADDED : மார் 28, 2026 10:56 PM

திண்டுக்கல்;காஸ் தட்டுப்பாடு எதிரொலியாக திண்டுக்கல் பிரியாணி கடைகளில் விறகு அடுப்பு சமையலால் ஏற்படும் சிரமத்தை காரணம் காட்டி ஆட்கள் வேலை செய்ய மறுப்பதால் உரிமையாளர்கள் புது சிக்கலை எதிர்கொள்ளும் நிலைக்கு ஆளாகி உள்ளனர்.
திண்டுக்கல்லில் வணிக காஸ் தட்டுப்பாடு எதிரொலியாக மெஸ்கள், டீக்கடைகள் மூடப்பட்டுள்ளன. காஸ் இருப்பு வைத்திருக்கும் டீக்கடைகள், ஓட்டல்களில் விற்பனை செய்யப்படும் பொருளுக்கு ரூ.5 முதல் ரூ.10 விலை உயர்த்தப்பட்டது. மார்க்கெட்டில் உணவு மூலப்பொருட்கள் விலையும் அதிகரித்ததை தொடர்ந்து நிலைமையை சமாளிக்க முடியாமல் பெரும்பாலான ஓட்டல்கள், உணவகங்கள், காலவரையறை இன்றி மூடப்பட்டன. இந்நிலையில் அசைவ உணவுகளின் 'ராஜா' என அழைக்கப்படும் பிரியாணிக்கு சிறப்பு வாய்ந்த திண்டுக்கல்லில் உள்ள ஓட்டல்களுக்கு புது சிக்கல் ஏற்பட்டுள்ளது.
ரவுண்ட் ரோடு பகுதியை சேர்ந்த பிரியாணி ஓட்டல் உரிமையாளர் கூறியதாவது:சாதாரண நாட்களில் வெளிச்சந்தையில் ரூ.2 ஆயிரத்துக்கு கிடைத்த வணிக காஸ் சிலிண்டர் தற்போது ரூ.5500க்கு விற்கப்படுகிறது. நிலைமையை சமாளிக்க முடியாத அதகாமானோர் ஓட்டலை இழுத்து மூடிவிட்டனர். இத்தொழிலை மட்டுமே பிரதானமாக நம்பி உள்ள பெரிய ஓட்டல்களை இழுத்து மூட வழி தெரியாமல் நிற்கிறார்கள். நிலைமையை சரி செய்ய விறகு அடுப்பு சமையலுக்கு மாற்றினால் அதில் ஏற்படும் சிரமங்களை சுட்டிக்காட்டி வடமாநில தொழிலாளர்கள் வேலை செய்ய மறுக்கின்றனர். வாரம் 3 நாட்கள் மட்டும் ஓட்டலை திறந்து தொழில் நடத்த வேண்டிய சூழ்நிலைக்கு தள்ளப்பட்டுள்ளோம். தற்போது கையிருப்பில் இருக்கும் சிலிண்டர்கள் இரண்டு நாட்களுக்கு தான் தாக்குப்பிடிக்கும். இந்நிலை தொடர்ந்தால் ஓட்டல் உரிமையாளர்களுக்கு தொழில் நஷ்டம் , வாடிக்கையாளர் இழப்பை சந்திக்க நேரிடும் என்றனர்.
