வேலைக்கேட்டு கோரிக்கை வைத்த சிறுமி; உறுதி அளித்த செந்தில்குமார்
வேலைக்கேட்டு கோரிக்கை வைத்த சிறுமி; உறுதி அளித்த செந்தில்குமார்
ADDED : ஏப் 16, 2026 09:43 PM

திண்டுக்கல்:திண்டுக்கல்லில் பொதுமக்களிடம் ஓட்டு சேகரித்த தி.மு.க., வேட்பாளர் செந்தில்குமாரிடம் சிறுமி ஒருவர் அவரின் தாயாருக்கு வேலைக்கேட்டு கோரிக்கை வைத்தார். அதை நிறைவேற்றித்தர நடவடிக்கை எடுப்பதாக வேட்பாளர் செந்தில்குமார் உறுதி அளித்தார்.
திண்டுக்கல் தொகுதியில்ஆர்.வி.நகர் தோட்டம், முகமதியாபுரம், பேகம்பூர் சிக்னல், ஜமால் தெரு, நத்தர்ஷா தெரு, காந்திஜி புது ரோடு, அங்கு விலாஸ் ரோடு, தெற்கு ரதவீதி, பெரியக்கடை வீதி, மேற்கு ரதவீதி, மணிக்கூண்டு, கிழக்கு ரதவீதிகளில் தி.மு.க.,வேட்பாளர் செந்தில்குமார் ஓட்டு சேகரித்தார். அப்போது அவர் பேசியதாவது: தமிழகத்தில் மீண்டும் தி.மு.க.,ஆட்சி அமைந்த பிறகு பள்ளி மாணவர்களுக்கான காலை உணவு திட்டம் 8ம் வகுப்பு வரை விரிவுப்படுத்த உள்ளது.
முதியோர், மகளிர் உரிமை தொகை ரூ.2 ஆயிரமாக உயர்த்தி வழங்கப்படும். மகளிர் சுய உதவிக்குழுக்களுக்கு ரூ.5 லட்சம் வரை பிணையில்லா கடன் வழங்கப்படும். இங்கு 10 ஆண்டு எம்.எல்.ஏ.,வாக இருந்த சீனிவாசன் தொகுதியின் வளர்ச்சிக்கு எந்தத்திட்டமும் செய்யவில்லை என்றார்.
ஆர்.வி.நகர் பகுதியில் ஓட்டு சேகரித்த போது சிறுமி ஒருவர் , ‛அங்கிள் நாங்க ரொம்ப கஷ்டபடுறோம். எங்கம்மா நர்ஸ் படிச்சிருக்காங்க. அவங்களுக்கு வேலை கிடைக்கல. நீங்க ஜெயிச்சு எங்கம்மாவுக்கு நர்ஸ் வேலை வாங்கி கொடுப்பீங்களா என கோரிக்கை வைத்தார். அப்போது செந்தில்குமார், தகுதியின் அடிப்படையில் நிச்ச்யம் அம்மாவுக்கு வேலை கிடைக்க நடவடிக்கை எடுப்பேன் என உறுதி அளித்தார். அப்போது கட்சியினர், பொதுமக்கள் உற்சாகத்தில் கைத்தட்டினர்.
