ADDED : செப் 12, 2026 04:42 PM
எரியோடு, செப்.13-
எரியோடு அருகே மாரம்பாடியில் அரசு டவுன் பஸ்சை சிறைபிடித்து மாணவர்கள் போராட்டம் நடத்தினர்.
வேடசந்துாரில் இருந்து மாரம்பாடி, குளத்துார் வழியே திண்டுக்கல்லிற்கும், அதே வழியில் மறுமார்க்கமாக அரசு டவுன் பஸ்கள் காலை, மாலை நேரங்களில் இயக்கப்படுகின்றன.
இந்த பஸ்கள் தாமதமாக இயக்கப்படுவதால் மாரம்பாடி பகுதி மாணவர்கள் குறித்த நேரத்திற்குள் பள்ளி, கல்லுாரிகளுக்கு செல்ல முடியாமல் அவதிப்படுகின்றனர். வேடசந்துாரில் இருந்து மாரம்பாடி வழியாக செல்லும் இரவு நேர கடைசி டிரிப் பஸ்சும் இயக்கப்படாதால் பொதுமக்கள் சிரமப்படுகின்றனர். வேடசந்துார் அரசு பஸ் பணிமனை கிளை மேலாளரிடம் பலமுறை புகார் தெரிவித்தும் பலனில்லை.
நேற்று காலை வேடசந்துாரில் இருந்து தாமதமாக மாரம்பாடிக்கு வந்த அரசு டவுன் பஸ்சை சிறைபிடித்து மாணவர்களுடன் சேர்ந்து கிராமத்தினர் போராட்டம் நடத்தினர். எரியோடு போலீசார் பேச்சுவார்த்தை நடத்தி சமாதானம் செய்து பஸ்சை விடுவித்தனர்.
