ADDED : நவ 03, 2025 05:08 AM

திண்டுக்கல்: திண்டுக்கல்லில் நேற்று கல்லறை திருநாள் கடை பிடிக்கப்பட்டது.
இறந்தவர்களின் நினைவை போற்றும் வகையிலும் அவர்களின் தியாகம், அன்பு, பலன்கள், விஸ்வாசம் ஆகியவற்றுக்கு நன்றி தெரிவிக்கும் விதத்திலும் ஒவ்வொரு ஆண்டும், நவ.2 தேதியை கிறிஸ்தவர்கள் கல்லறை திருநாளாக அனுசரிக்கின்றனர்.
அதன்படி, திண்டுக்கல், திருச்சி ரோட்டில் உள்ள கல்லறை தோட்டத்தில் கல்லறை திருநாள் நேற்று அனுசரிக்கப்பட்டது. கல்லறைகளை கழுவி சுத்தப்படுத்தி வண்ணப் பூக்களால் அலங்கரித்து, மெழுகுவர்த்தி, ஊதுப்பத்தி ஏற்றியதோடு அவர்களின் நினைவாக, வெல்லம், பொரி, கடலை, இனிப்புகள், சுண்டல் உள்ளிட்டவற்றை படைத்து குடும்பத்தினர் நினைவு கூர்ந்தனர்.
ஜெபம் செய்தும், பாடல்களை படித்தும், பிரார்த்தனை செய்து கண்ணீர் அஞ்சலி செலுத்தினர். கல்லறைத் தோட்டத்தில் நடந்த இந்நிகழ்வில் புனித லாசர் சர்ச் பாதிரியார்கள் நினைவு கூட்டு திருப்பலி நிறைவேற்றினர்.
இதில் ஆயிரத்துக்கும் மேற்பட்ட கிறிஸ்தவர்கள் குடும்பத்தினரோடு கலந்துகொண்டனர்.
வத்தலக்குண்டு: கத்தோலிக்க கிறிஸ்தவ கல்லறை தோட்டத்தில் கல்லறை திருநாள் அனுசரிக்கப்பட்டது.
பாதிரியார் எட்வர்ட் தலைமையில் சிறப்பு கூட்டுப் பிரார்த்தனை நடந்தது.
இறந்த உறவினர்களின் கல்லறைகளை மலர்களால் அலங்கரித்து மெழுகுவர்த்தி ஏந்தி அஞ்சலி செலுத்தி பிரார்த்தனையில் ஈடுபட்டனர்.
கன்னிவாடி: குட்டத்துப்பட்டி, ஆவரம்பட்டி, மைலாப்பூர், அனுமந்தராயன்கோட்டை, கரிசல்பட்டி பகுதிகளில் ஏராளமான கிறிஸ்தவர்கள் முன்னோர்களின் நினைவிடங்களில் மலர்களால் அலங்கரித்து, பொங்கல் வழிபாடு நடத்தினர்.
தேவாலயங்களில் சிறப்பு திருப்பலி நிறைவேற்றல், பிரார்த்தனைக் கூட்டங்கள் நடந்தது.
* என்.பஞ்சம்பட்டி, ஏ.வெள்ளோடு, சிறுநாயக்கன்பட்டி, ஆத்தூர் பகுதிகளில் கல்லறைத்திருவிழா வழிபாடுகள் நடந்தது.

