/
உள்ளூர் செய்திகள்
/
திண்டுக்கல்
/
போதிய மழை பெய்யாததால் நிலக்கடலை மகசூல் பாதிப்பு
/
போதிய மழை பெய்யாததால் நிலக்கடலை மகசூல் பாதிப்பு
ADDED : ஏப் 27, 2025 05:42 AM
ஒட்டன்சத்திரம்:   உரிய நேரத்தில் போதிய மழை பெய்யாததால்  திண்டுக்கல் மாவட்டம்  ஒட்டன்சத்திரம் பகுதியில் நிலக்கடலை விளைச்சல் பாதிக்கப்பட்டு மகசூல் பாதியாக குறைந்துள்ளது.
ஒட்டன்சத்திரம், கள்ளிமந்தையம், பாலப்பன்பட்டி, அப்பியம்பட்டி, நால்ரோடு, பொருளூர் சுற்றிய  கிராமப் பகுதிகளில் நிலக்கடலை அதிகமாக விளைவிக்கப்படுகிறது.
பல இடங்களில் மானாவாரி நிலங்களிலும் பயிரிடப்படுகிறது. 90 நாட்களுக்கு முன் நுாற்றுக்கணக்கான ஏக்கரில் நிலக்கடலை விதைக்கப்பட்டது. போதிய மழை பெய்யாததால் விவசாயிகள் போர்வெல்களில்  இருந்து தண்ணீரை பாய்ச்சி வந்தனர்.
கடும் வெப்பம் காரணமாக இந்த தண்ணீரும் போதுமானதாக இல்லை. இந்நிலையில்  பல பகுதிகளில் அறுவடை தொடங்கிய  நிலையில் காய் பிடிக்கும் தருணத்தில் போதிய தண்ணீர் பாய்ச்ச முடியாத காரணத்தால் மகசூல் மிகவும் பாதிக்கப்பட்டுள்ளது. எதிர்பார்த்த மகசூல் கிடைக்காததால் விவசாயிகள் விரக்தி அடைந்துள்ளனர்.
பாலப்பன்பட்டி விவசாயி சின்னச்சாமி கூறியதாவது:
இதற்கு முன்  4 கிலோ நிலக்கடலை விதைத்தால் இரண்டு மூடை கிடைத்தது. தற்போது தண்ணீர் பற்றாக்குறையால் மகசூல் குறைந்ததால் 4  கிலோவிற்கு ஒரு மூடை நிலக்கடலை மட்டுமே கிடைத்துள்ளது.
மகசூல்  பாதியாக குறைந்துள்ள நிலையில் பயிரிடப்பட்ட விவசாயிகளுக்கு பொருளாதார ரீதியில் பெரும் இழப்பு ஏற்பட்டுள்ளதால் அரசு மானியம் அறிவிக்க வேண்டும் என்றார்.

