வெள்ளி நீர்வீழ்ச்சியில் சுகாதாக்கேடு: 'கொடை' யில் சுற்றுலா பயணிகள் முகம் சுளிப்பு
வெள்ளி நீர்வீழ்ச்சியில் சுகாதாக்கேடு: 'கொடை' யில் சுற்றுலா பயணிகள் முகம் சுளிப்பு
UPDATED : மே 19, 2026 05:05 PM
ADDED : மே 19, 2026 04:30 PM

கொடைக்கானல்:கொடைக்கானல் சுற்றுலா தலத்தின் நுழைவுவாயிலில் உள்ள வெள்ளி நீர்வீழ்ச்சியில் ஏற்பட்டுள்ள சுகாதாக்கேடால் பயணிகள் முகம் சுளிக்கின்றனர்.
கொடைக்கானலுக்கு ஏராளமான பயணிகள் வருகின்றனர். நகரின் துவக்கத்தில் உள்ள வெள்ளி நீர்வீழ்ச்சியில் ஆர்ப்பரித்து கொட்டும் தண்ணீரின் அழகை ரசித்து இதன் பின்னணியில் புகைப்படம் எடுத்து மகிழ்கின்றனர்.நன்னீர் அருவியாக இருந்த வெள்ளி நீர்வீழ்ச்சி தற்போது சாக்கடை கழிவுநீர் கலக்கும் கூவமாக மாறி உள்ளது. குறிப்பாக கனமழை பெய்யும் போது விடுதிகளில் உள்ள செப்டிக் டேங்க் கழிவு, சாக்கடை கழிவுநீர் ஒட்டு மொத்தமாக சேர்ந்து வெள்ளி நீர்வீழ்ச்சி வழித்தடத்தில் கலக்கின்றன.
வெள்ளத்தில் சுகாதாரக்கேடு நிறைந்த சாக்கடை கழிவுநீர் அருவியில் ஆர்ப்பரித்து கொட்டுவதால் துர்நாற்றம் வீசுகிறது. அருவி விழும் தாழ்வான பகுதியில் குப்பை நிறைந்து சுகாதாரக்கேடாக உள்ளது.
வெள்ளி நீர்வீழ்ச்சியின் நீர் வழித்தடங்கள், அதில் விடப்படும் கழிவுநீர் குறித்து நீர்வளத்துறை, நகராட்சியினர் ஆய்வு செய்து புனரமைக்க நடவடிக்கை எடுக்க வேண்டும்.
அருவியில் விழும் தண்ணீர் பழநி நகரின் பரப்பலாறு அணைக்கு சென்று அப்பகுதி மக்களின் குடிநீர் ஆதாரமாக உள்ளது. பொதுப்பணித்துறையும் இவ்விஷயத்தில் கவனம் செலுத்த வேண்டும் என்பதே சுற்றுலா பயணிகள், இயற்கை அலுவலர்களின் எதிர்பார்ப்பாக உள்ளது.
