/
உள்ளூர் செய்திகள்
/
திண்டுக்கல்
/
மதுவிலக்கு, போதை, உணவு பொருள் கடத்தல் தடுப்பு ஸ்டேஷன்களை அதிகரியுங்கள்: சிறப்பு பிரிவு ஸ்டேஷன்களால் குற்றங்களை தடுக்க முடியவில்லை
/
மதுவிலக்கு, போதை, உணவு பொருள் கடத்தல் தடுப்பு ஸ்டேஷன்களை அதிகரியுங்கள்: சிறப்பு பிரிவு ஸ்டேஷன்களால் குற்றங்களை தடுக்க முடியவில்லை
மதுவிலக்கு, போதை, உணவு பொருள் கடத்தல் தடுப்பு ஸ்டேஷன்களை அதிகரியுங்கள்: சிறப்பு பிரிவு ஸ்டேஷன்களால் குற்றங்களை தடுக்க முடியவில்லை
மதுவிலக்கு, போதை, உணவு பொருள் கடத்தல் தடுப்பு ஸ்டேஷன்களை அதிகரியுங்கள்: சிறப்பு பிரிவு ஸ்டேஷன்களால் குற்றங்களை தடுக்க முடியவில்லை
UPDATED : மார் 09, 2026 06:18 AM
ADDED : மார் 09, 2026 06:06 AM

பட்டிவீரன்பட்டி,:திண்டுக்கல் மாவட்டத்தில் மதுவிலக்கு அமலாக்கம், போதைப்பொருள் தடுப்பு, உணவுப்பொருள் கடத்தல் தடுப்பு பிரிவு போலீஸ் ஸ்டேஷன்கள் தலா ஒன்று மட்டுமே உள்ளதால் சட்டவிரோத செயல்களை தடுக்க முடியாமல் போலீசார் தவிக்கின்றனர். இப்பிரிவுகளுக்கு கூடுதலாக ஒரு ஸ்டேஷன்களை அமைக்க அரசு நடவடிக்கை எடுக்க வேண்டும் என கோரிக்கை எழுந்துள்ளது.
டாஸ்மாக் கடைகள் நகரம் முதல் கிராமம் வரை வீதிக்கு வீதி திறக்கப்பட்டுள்ளது. எனவே கள்ளச்சாராயத்திற்கு தேவை எழவில்லை. ஆனாலும் தனியார் மதுபார்கள், போலி மது விற்பனை, கஞ்சா விற்பனை ஆகியவற்றை தடுக்க மாவட்டத்தில் மதுவிலக்கு போலீஸ் ஸ்டேஷன் திண்டுக்கல்லில் செயல்படுகிறது. ஒரு ஸ்டேஷன் மூலம் கள்ள மது விற்பனையை தடுக்க முடியாமல் திணறுகின்றனர். மாவட்டத்தில் கொடைக்கானல், தாண்டிக்குடி, சிறுமலை என மலைப்பகுதிகளும், வேடசந்தூர், நிலக்கோட்டை என பரந்து விரிந்த எல்லைகளாக உள்ளது.
திண்டுக்கல்லில் என்.ஐ.பி., எனப்படும் போதைப்பொருள் தடுப்பு நுண்ணறிவு பிரிவு ஸ்டேஷன் செயல்படுகிறது. இப்பிரிவு போலீசார் கஞ்சா, போதைப்பொருள் கடத்தலை கண்காணிக்கின்றனர். ஒரே ஒரு என்.ஐ.பி., பிரிவு போலீசாரால் இம்மாவட்டத்தில் கஞ்சா, போதைப்பொருள் கடத்தலை தடுப்பது பெரும் சவாலாக உள்ளது. இதனால் மாவட்டத்தில் போதைப்பொருள் புழக்கம், விற்பனை அதிகம் உள்ளது.
உணவுப்பொருள் கடத்தல், கலப்படத்தை தடுக்க சிவில் சப்ளை சி.ஐ.டி., பிரிவு ஸ்டேஷன் திண்டுக்கல்லில் மட்டுமே உள்ளது. இப்பிரிவு போலீசார் ரேஷன் அரிசி கடத்தல், ரேஷன் அரிசியை மாவாக அரைத்து கடத்துதல், கள்ள மார்க்கெட்டில் மண்ணெண்ணெய் விற்பனை தடுப்பு, உணவு பொருள் கலப்படம் என பல குற்றங்களை தடுக்க வேண்டியுள்ளது. ஆனால் ஒரு ஸ்டேஷன் மட்டுமே உள்ளதால் மாவட்டம் முழுவதும் ரேஷன் அரிசி கடத்தலை தடுக்க முடியாத சூழல் உள்ளது.
எனவே மதுவிலக்கு, என்.ஐ.பி., உணவுப்பொருள் கடத்தல் தடுப்பு பிரிவு போலீஸ் ஸ்டேஷன்களை கூடுதலாக ஏற்படுத்தினால் தான் கடத்தல் தடுப்பு இலக்கை அடைய முடியும். எனவே அரசு இதற்கான உத்தரவுகளை பிறப்பிக்க வேண்டும் என்று சமூக ஆர்வலர்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.
சைபர் கிரைம்களை தடுக்க கூடுதல் ஸ்டேஷன்
காலத்திற்கு ஏற்ப குற்ற நடவடிக்கைகள் பெருகி வருகிறது. அதற்கு ஏற்றார் போல் ஸ்டேஷன்களையும் அதிகரிக்க வேண்டும். சிறப்பு பிரிவு போலீசார் இருந்தாலும் அவர்களால் மாவட்டம் முழுவதும் கண்காணிக்க இயலாது. எனவே சிறப்பு பிரிவுக்கென தாலுகா வாரியாக ஸ்டேஷன்களை நியமிக்க வேண்டும். முக்கியமாக சைபர் கிரைம்களை தடுக்க கூடுதல் ஸ்டேஷன்கள் அமைக்க வேண்டும்.
உதயகுமார
அ.தி.மு.க., மாவட்ட வழக்கறிஞர் அணி செயலாளர், நிலக்கோட்டை

