ADDED : ஆக 24, 2026 07:50 PM
கன்னிவாடி, ஆக.25-
ரெட்டியார்சத்திரம், தர்மத்துப்பட்டி, வீரக்கல், வக்கம்பட்டி, அக்கரைப்பட்டி, பகுதிகளில் டிராக்டர் உழவு கட்டணம் 300 ரூபாய் வரை அதிகரிக்கப்பட்டு உள்ளது.
விவசாயிகள் சாகுபடி இயந்திர உழவுக்கு டிராக்டர்களை மட்டுமே பெரும்பாலும் நம்பியிருக்க வேண்டிய நிலை ஏற்பட்டுள்ளது. கடந்த சில மாதங்களாக ஆத்துார், செம்பட்டி, சித்தையன்கோட்டை, சீவல்சரகு, வக்கம்பட்டி பகுதிகளில் போதிய மழை இல்லை. இருப்பினும் குறுகிய காலத்தில் உழவு இயந்திரங்களின் தேவை அதிகரிப்பால் தனியார் டிராக்டர்களுக்கு கிராக்கி ஏற்பட்டுள்ளது. டீசல் விலை கடந்தாண்டைவிட கடுமையாக உயர்ந்துள்ள சூழலில் உழவு கட்டணத்தையும் வெகுவாக அதிகரித்து வசூலிக்கத் துவங்கியுள்ளனர்.
வீ.கூத்தம்பட்டி விவசாயி பொன்முருகன் கூறுகையில், ‘ஒரு மணி நேரத்திற்கு 650 முதல் 750 ரூபாயாக இருந்த உழவு கட்டணம் கடந்த ஆண்டில் 900 ரூபாய் வரை உயர்த்தினர். தற்போதைய டீசல் விலை உயர்வை காரணமாக கூறி ஏரியாவிற்கு ஏற்ப ஆயிரத்து 200 ரூபாய் வரை உயர்த்தியுள்ளனர். கூடுதல் வசூல் நடந்த போதும் குறித்த நேரத்தில் உழவு பணி நடப்பதில்லை. மழை பெய்தால் அடுத்த சாகுபடிக்கு ஆயத்தமாவதில் விதை, மருந்து, தொழிலாளர் கூலி, வேளாண் பணிகளுக்கான செலவினமும் அதிகரித்துள்ளதால், சமாளிப்பதில் சிரமம் ஏற்படும்’ என்றார்.
