UPDATED : மே 09, 2026 11:24 PM
ADDED : மே 09, 2026 11:04 PM
ஒட்டன்சத்திரம்:கோடை விடுமுறையை முன்னிட்டு ரயில்களில் கூட்டம் அதிகமாக இருப்பதால் பயணிகள் பயன்பெறும் வகையில் திண்டுக்கல் மாவட்டம் வழியாக செல்லும் ரயில்கள் அனைத்திலும் கூடுதல் பெட்டிகளை இணைக்க நடவடிக்கை எடுக்க வேண்டும்.
கோடை விடுமுறையை முன்னிட்டு பல்வேறு சுற்றுலா தலங்கள் , சொந்த ஊருக்கு செல்லும் குடும்பத்தினரின் எண்ணிக்கை அதிகரித்து வருகிறது. ரயில்களில் முன்பதிவு செய்பவர்களின் எண்ணிக்கை அதிகமாக இருப்பதால் காத்திருப்போர் பட்டியலில் எண்ணிக்கை அதிகமாக உள்ளது. இவர்கள் அனைவருக்கும் உறுதி செய்யப்பட்ட டிக்கெட் கிடைப்பது அரிதாகி வருகிறது. பஸ் கட்டணத்தை விட ரயில் கட்டணம் குறைவாகவும் ரயிலில் பயணிப்பது வசதியாகவும் இருப்பதால் நடுத்தர மக்களின் முதல் வாய்ப்பு ரயில் பயணமாகத்தான் உள்ளது. இதனால்தான் பல நாட்களுக்கு முன்பே முன்பதிவு செய்து விடுகின்றனர். முக்கியமான நிகழ்ச்சி, வெளியூர் செல்வதற்கு டிக்கெட் கிடைக்கும் வகையில் தட்கல் டிக்கெட் முறை அறிமுகப்படுத்தப்பட்டது. இதிலும் காத்திருப்போர் பட்டியல் அதிகமாக உள்ளது. ரயில்வே நிர்வாகம் பயணிகளின் நலனை முன்னிட்டு சிறப்பு ரயில்களை இயக்கினாலும் முன்பதிவு தொடங்கிய ஓரிரு நிமிடங்களில் தீர்ந்து விடுகிறது. இதனால் முன்பதிவு செய்யப்படாத பொதுப்பெட்டிகளில் பயணிப்போர் எண்ணிக்கை மிகவும் அதிகமாக உள்ளது.
கிறிஸ்துமஸ், புத்தாண்டு, பொங்கல் ,விசேஷ நாட்களில் கூடுதல் பெட்டிகளை இணைப்பது போல் கோடை விடுமுறை காலத்திலும் ரயில் பயணிகளின் சிரமத்தை போக்கும் வகையில் திண்டுக்கல் வழியாக இயக்கப்படும் ரயில்களில் பொதுப் பெட்டிகள் ,தூங்கும் வசதி கொண்ட பெட்டிகளை கூடுதலாக இணைக்க நடவடிக்கை எடுக்க வேண்டும்.
