ADDED : ஆக 25, 2026 03:40 PM
திண்டுக்கல், ஆக.26
மாவட்ட தடகள சங்கம் சார்பில் 14, 16, 18, 20 வயதிற்கு உட்பட்டோர் பங்கேற்கும் மாவட்ட அளவிலான 6வது ஜூனியர் சாம்பியன்ஷிப் தடகளப் போட்டிகள் திண்டுக்கல் ஜி.டி.என்., கலை அறிவியல் கல்லுாரியில் நடந்தது. போட்டிகளை மாவட்ட தடகள சங்க பொருளாளர் வெங்கடேசலு துவக்கி வைத்தார். 40 பள்ளிகள், கல்லுாரிகளில் இருந்து 600க்கும் மேற்பட்ட தடகள வீரர்கள், வீராங்கனைகள் பங்கேற்றனர்.
டிரையத்லான் ஏ.பி.சி., (மூன்று சகிப்புத்தன்மை போட்டிகள்), ஓட்டம், தடை தாண்டுதல் ஓட்டம், உயரம் தாண்டுதல், நீளம் தாண்டுதல், குண்டு எறிதல், தட்டு எறிதல், ஈட்டி எறிதல் உள்ளிட்ட போட்டிகள் நடந்தன.இப்போட்டிகளில் ஒட்டு மொத்த புள்ளிகளை பெற்று சாம்ப்ஸ் தடகள கிளப் முதலிடம் பிடித்தது. ஆர்ட்ஸ் அறக்கட்டளை தடகள கிளப் 2ம் இடம், ஜி.டி.என்., தடகள கிளப் 3ம் இடம் பிடித்தன.
அனைத்து பிரிவு போட்டிகளிலும் முதல் 3 இடங்களை பிடித்த வீரர், வீராங்கனைகளுக்கு பதக்கம், பாராட்டு சான்றிதழ் வழங்கப்பட்டது. சிறந்த வீரர், வீராங்கனைகளுக்கு பரிசு, கேடயம், போட்டிகளில் பங்கேற்ற அனைவருக்கும் பங்கேற்பு சான்றிதழ் வழங்கப்பட்டது.
இப்போட்டிகளில் முதல் 3 இடங்களை பிடித்த வீரர், வீராங்கனைகள் அக்டோபரில் நத்தம் என்.பி.ஆர்., கல்விக் குழுமத்தில் நடக்க உள்ள தமிழ்நாடு மாநில உள்மாவட்ட அளவிலான தடகள போட்டிகளில் பங்கேற்க உள்ளனர் என மாவட்ட தடகள சங்க தலைவர் துரை தெரிவித்துள்ளார்.
மாவட்ட தடகள சங்க நிர்வாகக்குழு உறுப்பினர் ராஜசேகர் நன்றி தெரிவித்தார். ஏற்பாடுகளை மாவட்ட தடகள சங்கம், தமிழ்நாடு தடகள சங்க செயலாளர் சிவகுமார், இணை துணைத்தலைவர் துரை ஆகியோர் செய்திருந்தனர்.
