/
உள்ளூர் செய்திகள்
/
திண்டுக்கல்
/
மக்களை கண்ணீர் சிந்த வைக்கும் கரூர் சுரங்கப்பாதை
/
மக்களை கண்ணீர் சிந்த வைக்கும் கரூர் சுரங்கப்பாதை
ADDED : ஏப் 04, 2025 05:23 AM

திண்டுக்கல்: திண்டுக்கல்- கரூர் ரோட்டில் ரெயில்வே சுரங்கப்பாதை பணி துவங்கி 7 ஆண்டுகள் கடந்தும் இன்றும் பயன்பாட்டிற்கு வராததால் இப்பாதையை பயன்படுத்தி வந்த மக்கள் கண்ணீர் சிந்த வைக்கும் நிலைக்கு தள்ளிவிட்டனர் நெடுஞ்சாலை துறையினர். இதன் பணிக்கான அறிகுறி தென்படாததால் இதற்கு விடிவுகாலம் எப்போதோ என மக்கள் கேட்கும் நிலையில் துறை அதிகாரிகளின் அலட்சிய போக்கு தொடர்கிறது .
திண்டுக்கல்லில் இருந்து கரூர் செல்லும் கரூர் சாலையில் சுரங்கப்பாதை அமைக்கும் பணி
2018 ல் ரூ.17.45 கோடி மதிப்பில் துவங்கியது. 7 ஆண்டுகள் கடந்தும் பணிகள் முடிந்த பாடில்லை . பணி துவங்கும்போதே சுரங்கப்பாதையில் தண்ணீர் தேங்கும் என்பதால் மேம்பாலம் அமைப்பதே சரி என பலரும் கூறி வந்தனர்.
ஆனால் யாரும் இதை காது கொடுத்து கேட்காது சுரங்கப்பாதை பணிகளும் நிறைவு பெற்றுள்ளது. ஆனால் இங்கு தண்ணீர் தேங்குவதை மட்டும் தடுக்க முடியவில்லை. சுரங்கப்பாதை தரைமட்டத்தில் இருந்து 20 அடி ஆழத்தில் உள்ளதால் சாரல் மழை பெய்தால் கூட குளம் போல் தண்ணீர் தேங்கி விடுகிறது. மழை இல்லாத நேரத்திலும் தண்ணீர் தேங்குகிறது. பணிமுடிந்த நிலையில் பொதுமக்களுக்காக பயன்பாட்டிற்கு கொண்டு வந்தனர்.
பாதை அடைப்பு
கார்கள், பஸ்கள் போன்றவை தேங்கிய நீரில் சிக்கியதால் போக்குவரத்துக்கு தடை விதிக்கப்பட்டு பாதையும் அடைக்கப்பட்டது. இதனால் இப்பாதை யொட்டி உள்ள மக்கள் பெரும் இன்னல்களுக்கு ஆளாகி உள்ளனர்.
கரூர் ரோட்டில் கலை கல்லுாரி, பொறியியல், பாலிடெக்னிக், நர்சிங் கல்லுாரிகள் உள்ளன. இந்த கல்லுாரிகளுக்கு செல்லும் மாணவ-ர்களும் பெரும் சிரமத்தை சந்தித்து வருகின்றனர்.
கரூர் ரோட்டில் வாகன போக்குவரத்து முற்றிலும் இல்லாதால் ஓட்டல், டீக்கடை, மளிகை உள்ளிட்ட பல்வேறு கடைகளில் வியாபாரம் இல்லாமல் மூடப்பட்டு கிடக்கின்றன. இதோடு இப் பகுதி தீவு போன்று தோற்றம் அளிக்கிறது.
சுரங்கப்பாதை பணிகள் நிறைவுபெற்று எப்போது விடிவுகாலம் பிறக்குமோ என்ற எதிர்பார்ப்பில் மக்கள் உள்ளனர். தற்போது மோட்டார்கள் மூலம் தேங்கிய நீரை வெளியேற்றுவதற்கான பணிகள் நடந்தாலும் மீண்டும், மீண்டும் நீர் தேங்கதான் செய்கிறது.
எதுவும் நடக்கலை
தண்ணீரை மோட்டார் மூலம் வெளியேற்ற தொட்டி கட்டி ஆட்டோமேட்டிகாக குழாய் வழியாக வெளியேற்றுவதற்கான பணிகள் நடப்பதாக அதிகாரிகள் தெரிவித்தாலும் பணிகள் ஏதும் நடப்பதாக தெரியவில்லை.இதன் உண்மை நிலை என்ன என தெரியாது மக்கள் பரிதவிக் கின்றனர்.
இப்பாதை வசதி இல்லாமல் இவ்வழியே செல்லும் வாகனங்கள் கூட்டுறவு நகர், காந்திஜி நகர் குறுகலான ரோட்டை பயன்படுத்துகின்றன. எந்நேரமும் போக்குவரத்துக்கு உள்ளாகி நெரிசலும் தொடர்கிறது .இதோடு இப்பகுதி குடியிருப்போரும் பாதிக்கின்றனர்.
வாகனங்களின் அலறல் காரணமாக முதியோர் ,குழந்தைகள் நிம்மதியை இழக்கின்றனர். மக்கள் நல்ன கருதி சுரங்கப்பாதையை விரைவில் பயன்பாட்டிற்கு கொண்டு வர மாவட்ட நிர்வாகம் நடவடிக்கை அவசியமாகிறது.
மேம்பாலமே தீர்வு
பாலசுந்தரம், சமூக ஆர்வலர், திண்டுக்கல் : நீண்ட ஆண்டுகளாக பணி நடைபெற்றும் இன்னும் நிறைவு பெறவில்லை. இவ்வழியாக கரூர், குஜிலியம்பாறை, எரியோடு உள்ளிட்ட பல்வேறு பகுதிகளுக்கு தினசரி சென்று வரும் ஆயிரக்கணக்கான பொதுமக்கள் இன்னல்களுக்கு உள்ளாகின்றனர். பாலம் கட்டுமான பணி ஆரம்பித்ததிலிருந்து இப்பகுதியில் உள்ள சிறு, குறு வியாபாரிகள் , வணிகர்கள் என வாழ்வாதாரம் கேள்விக்குறியாகி உள்ளது. ஒன்று பணியினை விரைந்து முடிக்க வேண்டும். இல்லையேல் மாற்று ஏற்பாட்டினை செய்ய வேண்டும். இங்கு மேம்பாலம் கட்டுவதே சரியான தீர்வாக அமையும்.
விரைந்து முடிக்கலாமே
ராம்குமார், தனியார் ஊழியர், திண்டுக்கல் : பழைய கரூர் ரோட்டில் அதிகளவில் கல்லுாரிகள் உள்ளன. மாணவர்கள் நாள்தோறும் சிரமப்படுவதை பார்க்க முடிகிறது. முக்கிய பகுதிகளான எம்.வி.எம்.நகர் தொடங்கி என்.எஸ். நகர் வரையிலான பொதுமக்கள் சிரமத்திற்கு உள்ளாகின்றனர். இதன் பணியினை காலம் கடத்தாமல் விரைந்து முடிக்க வேண்டியது அவசியம்.
நெடுஞ்சாலைத்துறை அதிகாரிகள் கூறுகையில்,'' 6 மாதத்திற்கு பணிகளை முடித்து பயன்பாட்டிற்கு கொண்டுவர நடவடிக்கை எடுத்து வருகிறோம் என்றனர்.

