/
உள்ளூர் செய்திகள்
/
திண்டுக்கல்
/
கூடம்நகர் ரோடு பணி நிறுத்தம்: வனத்துறை எதிர்ப்பால் கிராமத்தினர் தவிப்பு
/
கூடம்நகர் ரோடு பணி நிறுத்தம்: வனத்துறை எதிர்ப்பால் கிராமத்தினர் தவிப்பு
கூடம்நகர் ரோடு பணி நிறுத்தம்: வனத்துறை எதிர்ப்பால் கிராமத்தினர் தவிப்பு
கூடம்நகர் ரோடு பணி நிறுத்தம்: வனத்துறை எதிர்ப்பால் கிராமத்தினர் தவிப்பு
ADDED : டிச 23, 2025 07:30 AM

தாண்டிக்குடி: தாண்டிக்குடி கூடம்நகர் ரோடு பணி வனத்துறை எதிர்ப்பால் நிறுத்தப்பட்டதால் கிராமத்தினர் பாதித்துள்ளனர்.
தாண்டிக்குடி ஊராட்சிக்குட்பட்ட கூடம் நகரில் ஏராளமானோர் வசிக்கின்றனர். அத்யாவசிய தேவை, மருத்துவம், விளைபொருள் சந்தைப்படுத்துதல் உள்ளிட்டவற்றிற்கு பண்ணைக்காடு ரோட்டை பயன்படுத்துகின்றனர்.
9 கி.மீ., தொலைவில் 4 கி.மீ.,க்கு வனத்துறை பொறியியல் பிரிவு மூலம் ரோடு அமைத்துள்ளது. மீதமுள்ள 5 கி.மீ., ரோடு போக்குவரத்திற்கு பயனற்ற நிலையில் நாள்தோறும் கிராமத்தினர் அவதியடைவதோடு வாகனங்களும் பழுதாகின.
ரோடு அமைக்க கோரிக்கை விடுத்த நிலையில் சில மாதங்களுக்கு முன் ரூ.4 கோடி 89 லட்சத்தில் ரோடு அமைக்க நிதி ஒதுக்கப்பட்டது. முதற்கட்டமாக சேதமடைந்த ரோட்டை இயந்திரம் மூலம் சீரமைக்கும் பணி நடந்தது.
வனத்துறை தங்கள் இடத்தில் ரோடு அமைக்க எதிர்ப்பு தெரிவிக்க ரோடு பணி நிறுத்தப் பட்டுள்ளது. இதனால் கிராமத்தினர் போக்குவரத்து வசதியின்றி தவிக்கின்றனர்.
விவசாயி கணேசன், கூறுகையில், ''நாள்தோறும் பயன்படுத்தி வரும் ரோட்டின் அவலத்தால் வெகுவாக பாதித்துள்ளோம். ரோடு சீரமைப்பு பணி மேற்கொள்ள வனத்துறை முட்டுகட்டையாக உள்ளது.
ரோடு அமைக்கும் இயந்திரம் ,தளவாடப் பொருட்கள் கொண்டு செல்ல அனுமதி மறுக்கின்றனர். ரோடு அமைக்கும் பணியில் வனத்துறையின் தலையீட்டை சரி செய்ய மாவட்ட நிர்வாகம் நடவடிக்கை எடுக்க வேண்டும்'' என்றார்.
தாசில்தார் பாபு கூறுகையில்,'' கூடம்நகர் ரோடு குறித்து வருவாய்த்துறை, வனத்துறையிடம் அளவீடு செய்து ரோடு பணி துவங்க நடவடிக்கை எடுக்கப்படும்'' என்றார்.

