ADDED : டிச 19, 2024 05:36 AM

வேடசந்துார்: குடகனாறு அணை நிரம்பிய நிலையில் அணையை காண சுற்றுப்பகுதி மக்கள், மாணவர்கள் வந்து செல்கின்றனர்.
இப்பகுதி மக்களின் நலன் கருதி அணைப்பகுதியில் உள்ள பயன்பாபாடற்ற பூங்காவை புதுப்பிக்க வேண்டும் என்ற கோரிக்கை எழுந்துள்ளது.
ஆத்துார், தாடிக்கொம்பு, வேடசந்துார் வழியாக செல்லும் குடகனாற்றின் குறுக்கே அழகாபுரியில் 27 அடி கொண்ட குடகனாறு அணை உள்ளது.
தற்போது வலது பிரதான கால்வாய் பராமரிப்பு பணிகள் நடைபெற்று வருவதால் அணை நிரம்பிய நிலையில் உபரி நீர் குடகனாற்றில் திறந்து விடப்பட்டுள்ளது.தற்போது குடகனாறு அணை நிரம்பி உள்ளதால் சுற்றுப்பகுதி மக்கள் , பள்ளி, கல்லுாரி மாணவர்கள் வந்து செல்கின்றனர். விடுமுறை தினங்களில் கூட்டம் அலை மோதுகிறது. அணைப்பகுதியில் பூங்கா குடிநீர் வசதி கூட இல்லாததால் வந்தவர்கள் ஏமாற்றத்துடன் செல்கின்றனர்.
அழகாபுரி அணையை சுற்றிப் பார்க்க வரும் மக்களின் நலன் கருதி ஏற்கனவே அமைக்கப்பட்டு பராமரிப்பின்றி உள்ள பூங்காவை மீண்டும் முறையாக பராமரித்து நிழல் தரும் மரக்கன்றுகளை வளர்த்து, மக்கள் அமர்ந்து செல்லவும், குழந்தைகள் விளையாடிச்செல்லும் வகையில் பூங்காவை எழில் மிகு தோற்றத்துடன் அமைக்க வேண்டும் . அணைப்பகுதிக்கு வரும் மக்கள் தின்பண்டங்கள் , உணவுகளை சாப்பிட்டுவிட்டு குடிக்க கூட தண்ணீர் இன்றி திரும்பி செல்கின்றனர். மக்களின் நலன் கருதி பூங்காவை மீண்டும் பராமரிக்கவும், போதிய காவிரி குடிநீர் வசதியை ஏற்படுத்தவும், ஒன்றிய நிர்வாகம் , பொதுப்பணித்துறை நிர்வாகம் முன் வர வேண்டும்.
ஒதுங்க கூட இடமில்லை
வி.எம்.வெங்கடேசன், இடது பிரதான கால்வாய் நீர் பாசன சங்கத் தலைவர், செம்பாறைப்பட்டி: கூறியதாவது: 20 ஆண்டுகளுக்கு முன்பு பூங்கா நல்ல முறையில் இருந்தபோது பொதுமக்கள் , சுற்றுலா பயணிகள் கூடுதலாக வந்தனர். ஆடி 18, தீபாவளி உள்ளிட்ட விசேஷ தினங்களில் சாப்பாடு உள்ளிட்ட பொருட்களை கொண்டு வந்து அங்கேயே சாப்பிட்டு சென்றனர். தற்போது இந்த வசதி முற்றிலுமாக இல்லை. திடீரென மழை வந்தாலும் ஒதுங்கி நிற்க இடமில்லை.
புதுப்பிக்க வேண்டும்
வி.ஜெகதீசன், சமூக ஆர்வலர், பாம்புலுபட்டி: சிதிலமடைந்துள்ள பூங்காவை பராமரித்தால் இப்பகுதி மக்கள் , பள்ளி கல்லுாரி மாணவர்கள் மகிழ்ச்சி அடைவார். விடுமுறை தினங்களில், அணையை பார்ப்பதற்கென்றே கூடுதலான மக்கள் வந்து செல்வர். வேடசந்துார், குஜிலியம்பாறை தாலுகா பகுதிகளில்,பொழுதுபோக்கிற்கான இடம் எதுவும் இல்லாத நிலையில் அணை பகுதியில் உள்ள பூங்காவை புதுப்பிக்க வேண்டும். சேதமான தார் ரோடுகளை புதுப்பிக்க வேண்டும்.
மனு கொடுத்துள்ளோம்
பி.முத்துக்கிருஷ்ணன், முன்னாள் ஒன்றிய கவுன்சிலர், பாலப்பட்டி ஊராட்சி, அழகாபுரி: வேடசந்துார் எம்.எல்.ஏ., விடம் பூங்காவை மீண்டும் பராமரிக்க வேண்டும் என கோரிக்கை மனு கொடுத்துள்ளேன். அணையை பார்க்க வரும் மக்களுக்கு குடிநீர் வசதி கூட இங்கு இல்லை. மினி டேங்க் வைத்து காவிரி குடிநீரைக் கொண்டு வந்து நிரப்ப வேண்டும் என்ற கோரிக்கையும் வைத்துள்ளோம். அணையை பார்ப்பதற்காக வரும் பொது மக்களின் நலன் கருதி பூங்காவை பராமரிக்க நடவடிக்கை எடுக்க வேண்டும்.
