/
உள்ளூர் செய்திகள்
/
திண்டுக்கல்
/
திடக்கழிவு, ஆக்கிரமிப்பில் பாழடிக்கப்படும் குடகனாறு
/
திடக்கழிவு, ஆக்கிரமிப்பில் பாழடிக்கப்படும் குடகனாறு
திடக்கழிவு, ஆக்கிரமிப்பில் பாழடிக்கப்படும் குடகனாறு
திடக்கழிவு, ஆக்கிரமிப்பில் பாழடிக்கப்படும் குடகனாறு
ADDED : நவ 08, 2025 01:45 AM

திண்டுக்கல்: நீர்நிலைகள் ஆக்கிரமிப்பு, நீர் வழித்தடங்கள் அழிப்பு, ஊராட்சி பகுதிகளின் திடக்கழிவுகளை கொட்டுதல், மண், கிராவல் கொள்ளை, நிறைந்து கிடக்கும் சீமைக் கருவேல மரங்கள் என பெரும் பிரச்னைகளோடு காட்சியளிக்கிறது பல கிராம மக்களின் நீர் ஆதாரமான குடனாறு.
இந்த குடகனாறு மலைப்பகுதிகளில் தொடங்கி ஆத்துார், திண்டுக்கல், வேடசந்துார், கரூர் மாவட்டம் அரவக்குறிச்சி வழியாக 109 கி.மீ.,துாரம் பாய்ந்தபடி அமராவதி நதியில் கலக்கிறது. 100 மீட்டர் அகலம் உடைய குடகனாறு ஆறு 19 வருவாய் கிராமங்களை உள்ளடக்கிய பல ஏக்கர் பாசன பரப்பளவு பகுதி களுக்கு பயனளித்தது.
ஆனால் தற்போது குடகனாற்றை கருவேல மரங்கள் முழுமையாக ஆக்கிரமித்து புதர்மண்டி கிடக்கிறது. இந்த ஆறு உருவாகும் இடத்தில் இருந்தே கருவேல மரங்கள் செழித்து வளர்ந்துள்ளன. பல ஆண்டுகளாக குடகனாற்றில் துார்வாரும் பணியும் மேற்கொள்ளப் படவில்லை.
இதனால் குடகனாற்றின் வழித்தடம் முழுவதும் புதர்மண்டிய நிலையில் காட்சியளிக்கிறது. மழைக்காலத்தில் குடகனாற்றில் தண்ணீர் வந்தாலும் கூட அது அழகாபுரி அணையை சென்றடையுமா என்பது கேள்விக் குறியாக உள்ளது.
குடகனாறு இருக்கும் இடம் கூட தெரியாத அளவுக்கு கருவேல மரங்கள் வளர்ந்து காடு போல் காட்சியளிக்கிறது. அதோடு துார்வாரும் பணிகள் நடக்காததால் குடகனாற்றின் கரைப்பகுதிகள் பலத்த சேதமடைந்த நிலையில் உள்ளன.
மழைக்காலத்தில் ஆற்றில் தண்ணீர் செல்லும் போது கரைகள் உடைபட்டு விளைநிலங்களுக்குள் மழைநீர் புகுந்து பயிர்களை நாசப்படுத்தும் அபாயமும் உள்ளது.
இதோடு ஊராட்சி பகுதிகளில் இருந்து திடக்கழிவுகளை கொண்டு வந்து கொட்டி குடனாற்றையே நாசம் செய்கின்றனர். நீர் இல்லாததால் மணல் கொள்ளையும் தாராளமாக நடக்கிறது.
நீர் வழித்தடங்கள் ஆக்கிரமிக்கப்படுவதோடு அதன் வழித்தடங்களும் கொஞ்சம் கொஞ்சமாக அழிக்கப்பட்டு வருகின்றன.
ஒருபுறம் நரசிங்க புரம் வாய்க்காலில் உயரமாய் கட்டப்பட்டுள்ள இணைப்பு தடுப்பு சுவர் குடகனாறு நீரை எடுக்கிறெதென்றால் மறுபுறம் அதே வேலையை திண்டுக்கல் மாநகராட்சியின் கட்டுப்பாட்டில் உள்ள காமராஜர் நீர்தேக்கமும் செய்கிறது.காமராஜர் நீர்த்தேக்கம் உருவான காலத்திலிருந்து இன்றுவரை குடகனாறும் கூழையாறும் இணைந்து வரும் இடத்திலிருந்து இதுவரை குடகனாறு ஆற்றுக்கென தனியாக எந்தவொரு வழித்தடத்தையும் உருவாக்கி கொடுக்காமலே வைத்துள்ளனர்.
இதற்காக விவசாயிகள் பல போராட்டங்கள் நடத்தியதான் விளைவாக அரசு வல்லுநர் குழு அமைத்தது. ஆனால் அதன் அறிக்கை இன்னும் வெளியிடப்படவில்லை. நடைமுறைப்படுத்தவும் இல்லை என்பது விவசாயிகளின் குற்றச் சாட்டாக உள்ளது.
வறண்டு கிடக்கும் ஆறுகள் ராமசாமி, தலைவர் குடகனாறு பாதுகாப்பு சங்கம்: குடகனாறு நீரை பெரியாறு என பெயர்மாற்றம் செய்து மடைமாற்றி மரபுவழித்தடத்தை அழித்து சட்டத்திற்கு புறம்பாக உருவாக்கப்பட்ட வாய்க்கால் தடுப்புசுவரை முழுமையாக அகற்றி கொடுக்க வேண்டும்.
தமிழகம் முழுவதும் மழையால் அணைகள் நிரம்பினாலும் திண்டுக்கல் ஆறுகள் காய்ந்தே கிடக்கின்றன.
காமராஜர் நீர்தேக்கத்தின் முகப்பில் துவங்கி மறுகால் உபரிநீர் செல்லும் பகுதி வரை காணாமல் போன குடகனாறு வழித் தடத்தை மீண்டும் தனியாக உருவாக்கி மரபுவழித்தடத்தை உறுதிப்படுத்திட வேண்டும்.
ஆக்கிரமிப்புகளால் குறுகிய நிலையில் கிடக்கும் குடகனாறு வழித் தடத்தை சர்வே செய்து முழுமையான வழித்தடங்களை உற்பத்தியாகும் பகுதியிலிருந்துகடைமடைவரை மீட்டுக்கொடுத்தல் வேண்டும். வல்லுநர் குழு அறிக்கையை வெளியிட முதலில் நடவடிக்கை எடுக்க வேண்டும்.
நிலத்தடி நீரை பாதுகாக்கலாம் குப்புசாமி, பேராசிரியர்: நிலத்தடி நீரையும் காற்றின் ஈரப்பதத்தையும் உறிஞ்சி சுற்றுச்சூழலுக்கு கேடு விளைவிக்கும் கருவேல மரங்களை வெட்டி அகற்றப்பட வேண்டும். அப்போது தான் விவசாயிகளின் வாழ்வாதாரம் காக்கப்படும்.
குடகனாறு மீண்டும் அனைத்து கிராம மக்களும் பயன்பெறும் வகையில் மாற்ற வேண்டும். குடகனாற்றில் கலக்கும் திண்டுக்கல் தோல் தொழிற்சாலை கழிவுகள், திண்டுக்கல் மாநகராட்சி, ஊரகப்பகுதிகளில் இருந்து கொட்டப்படும் கழிவுநீர், ஸ்பின்னிங் மில் ரசாயனகழிவு நீர் ஆகியவற்றை முறையாக மறுசுழற்சி செய்து நிலத்தடி நீரையும், மண் வளத்தையும் பாதுகாத்திட வேண்டும்.

