ADDED : டிச 11, 2025 05:27 AM

நெய்க்காரப்பட்டி: பழநி குதிரையாறு அணைக்கு நீர்வரத்து அதிகரித்து உள்ளதை தொடர்ந்து இடது பிரதான கால்வாய் வழியாக விவசாயத்திற்கு தண்ணீர் திறந்து விடப்பட்டது.
பழநி சுற்றுப்பகுதிகளில் மழை பெய்து வருவதால் பழநி பகுதியில் உள்ள பாலாறு-பொருந்தலாறு அணை, வரதமா நதி அணை, குதிரையாறு அணை நீர் பிடிப்பு பகுதிகளில் நீர் வரத்து அதிகரித்துள்ளது.
இதன் காரணாமக வரதமா நதி அணை நிரம்பி வழிகிறது. 80 அடி கொண்ட குதிரையாறு அணையில் நீர் இருப்பு 78 அடியாக உள்ள நிலையில் அணைக்கு வினாடிக்கு 78 கன அடி நீர்வரத்து உள்ளது.
இதை தொடர்ந்து நேற்று (டிச. 10 ) முதல் 2026 ஏப். 8 வரை 120 நாட்களுக்கு இடது பிரதான கால்வாய் வழியாக தண்ணீர் திறந்து விடப்பட்டுள்ளது.
இதன் மூலம் திண்டுக்கல் மாவட்டத்தில் 1981.59 ஏக்கர், திருப்பூர் மாவட்டத்தில் 882.27 ஏக்கர் என 2863.86 ஏக்கர் நிலங்கள் பாசன வசதி பெறும். இதோடு ஆண்டிபட்டி, பாப்பம்பட்டி, ரெட்டையம்பாடி, வேலுசமுத்திரம், கொழுமம், சங்கராமநல்லுார் கிராமங்களும் பாசன வசதி பெறும்.
அணை நீர் திறப்பு நிகழ்ச்சியில் எம்.எல்.ஏ., செந்தில்குமார், நங்காஞ்சியாறு நீர்வள துறை செயற் பொறியாளர் பாலமுருகன், உதவி செயற்பொறியாளர் முத்துராமலிங்கம், உதவி பொறியாளர் பிரவீன், பழநி தாசில்தார் பிரசன்னா கலந்து கொண்டனர்.

