/
உள்ளூர் செய்திகள்
/
திண்டுக்கல்
/
மூன்றாவது மொழியை கற்பது முத்தான வாய்ப்பு
/
மூன்றாவது மொழியை கற்பது முத்தான வாய்ப்பு
ADDED : பிப் 21, 2025 06:35 AM

தமிழகம் பின்தங்கிவிடும்
-என்.ராமர்
வடமதுரை
கூடுதலாக ஒரு மொழி கற்பதை திணிப்பு என்பது மக்களை திட்டமிட்டு ஏமாற்றும் சொல். சிறுகுழந்தை முதன்முதலில் பள்ளிக்கூடம் செல்ல விரும்பாமல் அடம் பிடிக்கும். அதற்காக பள்ளிக்கு அனுப்பாமல் விட்டுவிட்டால் அக்குழந்தை வளர்ந்த பின்னர் நவீன உலகத்தில் எவ்வளவு சிரமம், அவமானங்களை சந்திக்கும் என்பது அனைவருக்கும் தெரியும். அதே நிலையில் தற்போது தமிழகம் உள்ளது. அரசு பள்ளிகளை தவிர்த்து தனியார் பள்ளிகளுக்கு படையெடுக்கும் நிலையால் மாணவர் சேர்க்கை குறைந்து பல அரசு துவக்கப் பள்ளிகள் மூடப்பட்டுள்ளது. அரசு பள்ளி மாணவர்கள் போட்டி தேர்வுகளை எதிர்கொள்வதில் சிரமப்படுகின்றனர்.
மற்ற மாநில மாணவர்கள் 3 மொழிகள் கற்கும் நிலையில் தமிழகத்தில் அரசு பாடத் திட்டத்தை நம்பியிருப்போருக்கு 2 மொழிகள் மட்டுமே கிடைக்கும் என்பது சரியில்லை.
பல்வேறு காரணங்களால் திறன்மிகு மாணவர்கள் குறைவாக இருக்கும் தமிழகம் மேலும் பின்தங்கிவிடும்.
ஏற்பதே சிறப்பு
-காயத்ரி
பழநி
மொழி என்பது பிறருடன் எளிமையாக தொடர்பு கொள்ள உதவும் ஊடகம். ஆங்கிலம், தமிழ் மட்டும் இல்லாமல் பிற மொழிகளை கற்றுக் கொண்டால் குழந்தைகள் வெளிநாடு,வெளியூர் போன்ற இடங்களுக்கு செல்லும்போது எளிதாக மற்றவர்களுடன் பழகவும், ஆலோசிக்கவும் உதவும். இதற்கான வாய்ப்பு தமிழ்நாடு பாடத்திட்டத்தில் வரும்போது அதை முழுவதுமாக ஏற்று கொள்ள வேண்டும். எதிர்காலத்தில், குழந்தைகள் முன்னேற்றத்திற்கு மொழி ஒரு தடையில்லாமல் இருக்கும். பள்ளிக் கல்வியில் மும்மொழி கற்றுக் கொள்வதை மனப்பூர்வமாக ஏற்றுக் கொள்ள வேண்டும்.
பிள்ளைகளுக்கு தேவை
-செந்தில்
திண்டுக்கல்
என் குழந்தைகள் அரசு பள்ளியில் படிக்கின்றனர். அவர்களது உயர் கல்விக்கு கட்டாயம் மூன்றாவது மொழியை கற்றுக்கொள்வது அவசியம். அதுமட்டுமில்லாமல் நாகரீக உலகத்தில் ஹிந்தி தெரிந்தால் எந்த மாநிலத்திலும் வாழ்க்கை நடத்தலாம் என்ற சூழல் உருவாகி உள்ளது. இது வரவேற்க கூடிய திட்டம் தான். குழந்தைகளுக்கு கட்டாயம் மூன்றாவது மொழியை கற்றுக்கொடுக்க வேண்டும்.
இருட்டடிப்பு செய்து முடக்கும் செயல்
-நாகஜோதி
சின்னாளபட்டி
தமிழகத்தில் இரு மொழிக் கொள்கையை பின்பற்றுவது தமிழர்களின் விருப்பம் என கூறுகின்றனர். பிற மொழிகளை கற்கவும், ஏற்கவும் ஆர்வம் உடையவர்களாகவே தமிழர்கள் இருந்துள்ளனர். மகாத்மா காந்தியின் ஹிந்தி பிரசார சபாவில் தமிழகத்தில் ஒவ்வொரு ஆண்டும் தொடர்ந்து ஹிந்தி படிப்போர் எண்ணிக்கை அதிகரித்து வருகிறது.
இந்தியாவிலேயே தமிழகம் தான் இதில் முதலிடத்தில் இருப்பதாக கூறுகின்றனர். தேசிய கல்வி கொள்கையை ஏற்பதற்கான விவாதத்தில் ஹிந்தி திணிப்பு என்ற சொல் அரசியல் களத்தில் பயன்படுத்துவது புதிது இல்லை. பா.ஜ., அரசு கூறும் கருத்து எதுவாக இருந்தாலும் எதிர்ப்போம் என்ற மனநிலையுடனே தமிழக அரசியலாளர்களில் பலர் செயல்படுகின்றனர். ஹிந்தியை எதிர்ப்பது எதிர்கால சமுதாயத்தின் அறிவுத்திறனை இருட்டடிப்பு செய்து முடக்கும் செயலாக கூறலாம்.
வேலை வாய்ப்பு பெற வழி
-ப.கார்த்திகைசாமி
செடிப்பட்டி
புதிய கல்விக் கொள்கையை மகிழ்ச்சியோடு வரவேற்கிறேன். தமிழ் ,ஆங்கிலம் அல்லாது வேறு மொழியை மாணவர்கள் கற்று கொள்வது அவர்களின் வளர்ச்சிக்கு நல்லது. வசதி படைத்தவர்கள் தங்களது பிள்ளைகளை ஹிந்தி உள்ளிட்ட வேறு சில மொழிகளை தனிப்பட்ட முறையில் படிக்க வைக்கின்றனர்.
மத்திய அரசின் இந்த திட்டம் நடைமுறைக்கு வரும்போது அரசு ,அரசு உதவி பெறும் பள்ளிகளில் படிக்கும் ஏழை மாணவர்களும் வேறு மொழிகளை பள்ளிகளிலே கற்று பயன்பெறுவர். வேலை வாய்ப்பை எளிதாக பெறுவர். அரசியல் கட்சியினர் அரசியல் உள்நோக்கத்தோடு இதை எதிர்த்து வீண் பிரசாரம் செய்கின்றனர். ஆனால் அவர்கள் பிள்ளைகளோ வசதி படைத்த பள்ளிகளில் படிக்க வைத்து பல மொழிகளையும் படிக்க வைக்கின்றனர்.