ADDED : ஆக 24, 2025 03:42 AM

திண்டுக்கல்: திண்டுக்கல் கலெக்டர் அலுவலகத்தில் நடந்த அனைத்து துறை அதிகாரிகள் ஆய்வுக்கூட்டத்தில் கூட்டு குடிநீர் திட்ட பணி தொடர்பாக துறை அதிகாரியை அமைச்சர் பெரியசாமி எச்சரித்தார்.
திண்டுக்கல் கலெக்டர் அலுவலகத்தில் நடந்த அனைத்து துறை அதிகாரிகள் ஆய்வுக்கூட்டத்தில் ஊரக வளர்ச்சித்துறை அமைச்சர் பெரியசாமி, உணவுத்துறை அமைச்சர் சக்கரபாணி , மாவட்டத்தில் நடந்துவரும் வளர்ச்சிப்பணிகள் , நிலுவையில் உள்ள பணிகள் குறித்து அனைத்து துறை அலுவலர்களிடம் கேட்டறிந்தனர்.
கூட்டு குடிநீர் திட்டங்களுக்காக கட்டப்பட்ட குடிநீர் மேல்நிலை நீர்தேக்கத்தொட்டிகள் நிலை குறித்து அமைச்சர் பெரியசாமி கேள்வி கேட்க, நிதி ஒதுக்கீடு பிரச்னை காரணமாக பணிகள் தாமதப்படுவதாக துறை அதிகாரி கூறினர். அப்போது அமைச்சர், ஒருவாரத்திற்குள் எல்லா பிரச்னையையும் சரிசெய்துவிடவேண்டும், அடுத்தக்கூட்டத்தின்போது பணிகளில் எந்த முன்னேற்றமும் இல்லை என்றால் நடப்பதற்கு நான் பொறுப்பல்ல என எச்சரித்தார்.கலெக்டர் சரவணன் தலைமை வகித்தார். எம்.எல்.ஏ.,க்கள் செந்தில்குமார், காந்திராஜன், டி.ஆர்.ஓ., ஜெயபாரதி கலந்து கொண்டனர்.

