/
உள்ளூர் செய்திகள்
/
திண்டுக்கல்
/
இல்லாத விளக்குகள், போடாத ரோடுகள்
/
இல்லாத விளக்குகள், போடாத ரோடுகள்
ADDED : ஏப் 26, 2025 03:38 AM

திண்டுக்கல்: பல இடங்களில் போடப்படாத ரோடுகள், இல்லாத விளக்குகள் என சீலப்பாடி ஊராட்சி மக்கள் பல இன்னல்களை சந்திக்கின்றனர்.
என்.எஸ்.நகர்., சாலையூர், செல்லமந்தாடி,சீலப்பாடி, சுக்காம்பட்டி, கூட்டுறவு நகர், என்.ஜி.ஓ., காலனி உள்பட பல்வேறு பகுதிகளை உள்ளடக்கிய இந்த ஊராட்சியில் பல பிரச்னைகள் உள்ளன.
விநாயகர் கோயில் தெருப்பகுதியில் ரோடுகள் முறையாக இல்லை. சிறு மழை பெய்தால் கூட தண்ணீர் தேங்கி விடுகிறது. மழை பெய்யவில்லை என்றாலும் முறையற்ற ரோட்டினால் வாகன ஓட்டிகள் அவதிப்படுகின்றனர். மழை நேரங்களில் தெருக்களில் நடமாட முடியாத அளவிற்கு மழைநீர் தேங்குகிறது. குப்பை ரோட்டில் கொட்டி தீ வைப்பதால் உருவாகும் கரும்புகை குடியிருப்புகளுக்குள் புகுந்து குழந்தைகள்,வயதானவர்குளுக்கு மூச்சுத்திணறலை ஏற்படுத்துகிறது. குப்பைத்தொட்டிகள் இல்லா ஊராட்சி என்ற திட்டத்தில் குப்பைத் தொட்டிகள்அகற்றப்பட்டுள்ளதால் கண்ட இடத்தில் குப்பை கொட்டப்படும் அவல நிலை நீடிக்கிறது. பழைய கரூர் ரோடு பெஸ்கி காலேஜ் எதிரில் எந்நேரமும் அதிகளவில் கொட்டப்படும் குப்பையால் சுகாதாரக்கேடு ஏற்படுகிறது.
பிரதான பகுதியான என்.எஸ்., நகர் பஸ் ஸ்டாப் உள்ளிட்ட இடங்களில் தெருவிளக்குகள் இல்லை. இரவு நேரங்களில் வெளியே வருவதற்கு அச்சமான சூழல் நிலவுகிறது. ஊராட்சி பகுதிகளில் முக்கிய ரோடுகளை இணைக்கும் பகுதிகளில் ரோடுகள் போடப்பட்டுள்ளன. குறுக்கு சந்துகள், தெருக்களில் ரோடுகள் முறையாக இல்லை.
குறைகளை சரி செய்யுங்க
விஜய், ஜி.எஸ்., நகர் : குடியிருப்போர் நலச்சங்கங்கள் அதிகளவில் உள்ளன. அவர்களின் குறைகளை மாதம் ஒரு முறை கேட்டறிந்து சரிசெய்ய வேண்டும். குறிப்பாக அனைத்து வீடுகளுக்கும் ஜல்ஜீவன் திட்டத்தின் வாயிலாக குடிநீர் வசதி ஏற்படுத்தி தர வேண்டும். வளர்ந்து பகுதிகள் என்பதால் ஜி.டி.என்., கல்லுாரி அருகே தேசிய மையமாக்கப்பட்ட வங்கி உருவாகிட வழிவகுக்க வேண்டும். எல்லாற்றவற்றிற்கும் நகர் பகுதிக்கு வருவது சிரமத்தை ஏற்படுத்துகிறது.
தெருவிளக்குள் தேவை
தீத்தான், ஜி.கே., நகர் விரிவாக்கப்பகுதி : பல இடங்களில் சாக்கடைகள் இல்லை. சிறு மழை பெய்தால் கூட பெரும் சிரமத்தை சந்திக்க வேண்டியுள்ளது. முக்கிய ரோடுகள், தெருக்களுக்கு விளக்குகள் பொருத்த வேண்டும். பழைய கரூர் ரோடு சுரங்கப்பாதை சரிசெய்யாமல் உள்ளதால் நகர்புறத்திலிருந்த உராட்சி குடியிருப்பு பகுதிகளுக்கு வர சிரமம் ஏற்படுகிறது.
போலீசார் ரோந்து தேவை
பாலசந்திரபோஸ், லட்சுமி நகர் : தெருக்கள் ,குடியிருப்பு பகுதிகளில் உள்ள ரோடுகள் சேதமடைந்துள்ளன. இவற்றை விரைந்து சரிசெய்ய வேண்டும். புறநகர் பகுதி என்பதால் நாளுக்கு நாள் குடியிருப்புகளின் எண்ணிக்கை அதிகரித்து வருகிது. அதற்கேற்றாற்போல் அடிப்படை வசதிகளை அதிகப்படுத்த வேண்டும். புறநகர் பகுதி என்பதால் அவ்வப்போது போலீசார்ர் ரோந்து பணிகளை மேற்கொள்ள வேண்டும்.