போஸ்டர் ஒட்டுவோர் மீது வழக்கு கண்டிப்புக்கு வலியுறுத்திய எம்.எல்.ஏ.,
போஸ்டர் ஒட்டுவோர் மீது வழக்கு கண்டிப்புக்கு வலியுறுத்திய எம்.எல்.ஏ.,
ADDED : மார் 14, 2026 07:31 AM

வடமதுரை:''அரசு கட்டடங்களை அசிங்கமாக்கும் வகையில் போஸ்டர்கள் ஒட்டுவோர் மீது புகார் செய்வதுடன் நிற்காமல் போலீசில் வழக்கும் பதிய வேண்டும் ''என வேடசந்துார் தி.மு.க., எம்.எல்.ஏ., காந்திராஜன் அதிகாரிகளை வலியுறுத்தினார்.
வடமதுரை சவுந்தரராஜப் பெருமாள் கோயிலில் 2011 முதல் தினமும் 50 பேருக்கு அன்னதானம் வழங்கப்படுகிறது. இதற்காக ஓட்டு கூரையிலான பழைய கட்டடமே பயன்பாட்டில் இருந்தது. இது பாதுகாப்பற்றதாக இருப்பது குறித்து தினமலர் நாளிதழில் செய்தி வெளியானது. இதன் எதிரொலியாக ரூ.72 லட்சத்தில் புதிதாக அன்னதான கூடம் கட்டி முடிக்கப்பட்டு நேற்று திறப்பு விழா நடந்தது. இதை திறந்து வைத்த காந்திராஜன் எம்.எல்.ஏ., பேசுகையில்,'' அரசு சொத்தான கட்டடங்களில் கண்டபடி போஸ்டர்கள் ஒட்டி அசிங்கமாக மாற்றும் போக்கு உள்ளது. இந்நிலை உருவாக அதிகாரிகள் வாய்ப்பு தரக்கூடாது. சுவரில் போஸ்டர்கள் ஒட்டக் கூடாது மீறினால் போலீசார் மூலம் நடவடிக்கை எடுக்கப்படும் என தனி பலகையில் அறிவிப்பு செய்ய வேண்டும். மீறி போஸ்டர் ஒட்டுவோர் மீது போலீசில் புகார் செய்வதுடன் நிற்காமல் வழக்கும் பதிய வேண்டும். அப்படி நடவடிக்கை சென்றால் மட்டுமே இப்பிரச்னையில் மாற்றம் ஏற்படும். கோயில் சன்னதி வீதியை மிகவும் சுத்தமான பராமரிக்க வேண்டும் ''என்றார். செயற்பொறியாளர் ராஜேந்திரன், செயல் அலுவலர் முத்துலட்சுமி, முன்னாள் அறங்காவலர் குழு தலைவர்கள் பத்மநாபன், சொக்கலிங்கம், தி.மு.க., ஒன்றிய செயலாளர்கள் சுப்பையன், பாண்டி, நகர செயலாளர்கள் கணேசன், கருப்பன் பங்கேற்றனர்.
