UPDATED : செப் 03, 2026 10:36 PM
ADDED : செப் 03, 2026 08:52 PM

பண்ணைக்காடு:கொடைக்கானல், தாண்டிக்குடி மலைப்பகுதியில் ரோட்டோரம் அடர்ந்து வளர்ந்துள்ள புதர் செடிகளால் வாகன விபத்துக்கள் தொடர்கிறது. கிளைகளை மட்டும் வெட்டாமல் வேரோடு அகற்றுவதற்கு நெடுஞ்சாலைத்துறை நடவடிக்கை எடுக்க வேண்டும்.
மாவட்டத்தை பொறுத்தமட்டில் கொடைக்கானல் சுற்றுலாத் தலமாகவும், பழநி ஆன்மிகத் தலமாகவும் உள்ளது. தாண்டிக்குடி, கொடைக்கானல், நத்தம், பழநி உள்ளிட்டவை மலை சார்ந்த இடமாக உள்ளன.
இச்சூழலில் ரோட்டோரம் வளரும் புதர் செடிகளை முறையாக அகற்றாததால் விபத்துக்கள் ஏற்படுகின்றன. குறிப்பாக மலைப்பகுதியில் அதிக மழைப்பொழிவால் செடி, கொடிகள் விரைவில் அடர்ந்து வளர்கின்றன.
இதனால் ரோட்டில் எதிரே வரும் வாகனங்கள் தெரியாத நிலையில் விபத்துக்கள் ஏற்படுகின்றன. ரோட்டை கடந்து செல்லும் வாகனங்களில் செடிகளால் கீறல், கண்ணாடி சேதமடைகின்றன. வனவிலங்குகள் புதர் செடிகளுக்குள் மறைந்து நிற்பதால் மனித, வனவிலங்கு மோதல் ஏற்படுகிறது.
நெடுஞ்சாலைத்துறை பணியாளர்களை கொண்டு அவ்வப்போது செடி, கொடிகளில் கிளைகளை மட்டும் அகற்றுவதால் இவை விரைவில் துளிர்கிறது. வேரோடு செடிகள் அகற்றப்படாததால் ஊர் பெயர் பலகை, வளைவு, ரோடு சிக்னல்கள் குறித்த சமிக்ஞைகள் தெரியாத நிலை உள்ளது. புதர் செடிகளை வேரோடு இயந்திரங்கள் கொண்டு அகற்றும்பட்சத்தில் ரோடுகள் பளிச்சிடும். மாவட்ட நிர்வாகம் நடவடிக்கை எடுக்க வேண்டும்.
---
கண் துடைப்பு பணிகளால் பயனில்லை
கொடைக்கானல், தாண்டிக்குடி மலை ரோடுகள் ஒரு வழித்தடமாக உள்ளன. இங்கு அபரிவிதமாக வளரும் செடி, கொடிகளால் எதிரே வரும் வாகனங்கள் தெரியாத நிலையில் அடிக்கடி விபத்துக்கள் ஏற்படுகின்றன.
இச்செடிகளை கண் துடைப்பாக நெடுஞ்சாலைத்துறை அகற்றுவதால் சில வாரங்களில் துளிர் விடுகின்றன. இவற்றை இயந்திரங்கள் கொண்டு வேரோடு அகற்றும்பட்சத்தில் இப்பிரச்னை சரி செய்யப்படும்.
இதுகுறித்து அதிகாரிகளுக்கு புகார் தெரிவித்தும் நடவடிக்கை எடுப்பதில்லை. மாவட்ட நிர்வாகம் இவ்விஷயத்தில் கவனம் செலுத்தி மலைப்பகுதி சார்ந்த ரோடுகளில் உள்ள புதர்களை வேரோடு அகற்ற வேண்டும்.
- ஜெயபிரகாஷ், இயற்கை ஆர்வலர், பண்ணைக்காடு.
