/
உள்ளூர் செய்திகள்
/
திண்டுக்கல்
/
எங்கும் இல்லை யூரியா: பாதிப்பில் சோளம், மக்காச்சோளம் விவசாயிகள்
/
எங்கும் இல்லை யூரியா: பாதிப்பில் சோளம், மக்காச்சோளம் விவசாயிகள்
எங்கும் இல்லை யூரியா: பாதிப்பில் சோளம், மக்காச்சோளம் விவசாயிகள்
எங்கும் இல்லை யூரியா: பாதிப்பில் சோளம், மக்காச்சோளம் விவசாயிகள்
ADDED : டிச 09, 2025 06:22 AM

வேடசந்தூர்: சோளம், மக்காச்சோளம் பயிர்களுக்கான யூரியா கிடைக்காததால் பயிர்கள் வளராமல் போதிய மகசூல் கிடைக்காது விவசாயிகள் குமுறுகின்றனர்.
வேடசந்துார் தாலுகா பகுதியில் போதிய பருவமழை இல்லாததால் போர்வெல்கள் , கிணறுகளுக்கு போதிய நீர் வரத்து இல்லை. இதனால் இருக்கிற தண்ணீரை வைத்து சோளம், மக்காச்சோளம் உள்ளிட்ட விவசாயத்தில் விவசாயிகள் ஈடுபட்டு வருகின்றனர். வளர்த்து வரும் கால்நடைகளுக்கான தீவனத்தை முக்கிய குறிக்கோளாகக் கொண்டு சோளம், மக்காச்சோளம் பயிர்களை அதிகம் பயிரிட்டு வருகின்றனர்.
மழையும் பொய்த்து விட்ட நிலையில் மானாவாரி விவசாயமாக பரியிடப்பட்ட சோளம், மக்காச்சோளம் பயிர்களுக்கு யூரியா உரம் போடும்போது பயிர்கள் நன்கு வளரும். கூடுதல் மகசூலும் கிடைக்கும் என்ற எண்ணத்தில் விவசாயிகள் யூரியா மீது அதிக ஆர்வம் காட்டுகின்றனர்.
ஆனால் விவசாயிகளுக்கு தேவையான யூரியா கூட்டுறவு சொசைட்டி, தனியார் கடைகளில் கையிருப்பு இல்லை. முறையான சப்ளையும் இல்லை. இதனால் யூரியாவை தேடி விவசாயிகள் அலைந்து ஓய்ந்து விட்டனர். மழைக்காலம் முடிந்த பிறகு யூரியா வந்து என்ன பயன் என விவசாயிகள் குமுறுகின்றனர்.
நாகம்பட்டி விவசாயி பி.மோகன்,'' இரண்டு ஏக்கரில் மக்காச்சோளம் பயிரிட்டு தற்போது நன்கு வளர்ந்து மக்காச்சோள கதிர்களுடன் உள்ளது. இந்த நேரத்தில் யூரியா துாவினால் மகசூல் நன்கு கிடைக்கும். ஒரு மாதமாக யூரியாவை தேடியும் எங்கும் கிடைக்கவில்லை. இந்த நேரத்தில் யூரியா விநியோகம் முறையாக நடந்தால் விவசாயிகள் பயன்பெறுவர்'' என்றார்.
லகுவனம்பட்டி கந்தசாமி கூறுகையில்,'' கால்நடைகளுக்கான தீவனத்தை கருத்தில் கொண்டு 3 ஏக்கரில் சோளப் பயிர்கள் பயிரிட்டேன். ஒரு மாதம் கடந்து விட்டது. இன்னும் ஒரு ஜான் உயரத்திலே உள்ளது. இந்த நேரத்தில் யூரியா போட்டால் பயிர்கள் நன்கு வளரும். கால்நடைகளுக்கு போதுமான தீவனம் கிடைத்துவிடும் என்ற நம்பிக்கையில் இருந்தேன். இதற்காக யூரியாவை தேடி அலைந்து திரிந்தது தான் மிச்சம். யூரியா வரத்தே இல்லை என்கின்றனர். என்னை போன்ற ஏராளமான விவசாயிகள் பாதிக்கப்பட்டுள்ளனர் ''என்றார்.

