/
உள்ளூர் செய்திகள்
/
திண்டுக்கல்
/
நீர்ப்பிடிப்பு பகுதியில் மழை இல்லாததால் அணைகளுக்கு நீர்வரத்து இல்லை ; குடிநீர், பாசன நீர் தட்டுப்பாடு அச்சத்தில் மாவட்ட மக்கள்
/
நீர்ப்பிடிப்பு பகுதியில் மழை இல்லாததால் அணைகளுக்கு நீர்வரத்து இல்லை ; குடிநீர், பாசன நீர் தட்டுப்பாடு அச்சத்தில் மாவட்ட மக்கள்
நீர்ப்பிடிப்பு பகுதியில் மழை இல்லாததால் அணைகளுக்கு நீர்வரத்து இல்லை ; குடிநீர், பாசன நீர் தட்டுப்பாடு அச்சத்தில் மாவட்ட மக்கள்
நீர்ப்பிடிப்பு பகுதியில் மழை இல்லாததால் அணைகளுக்கு நீர்வரத்து இல்லை ; குடிநீர், பாசன நீர் தட்டுப்பாடு அச்சத்தில் மாவட்ட மக்கள்
ADDED : மார் 07, 2026 07:15 AM

பழநி:திண்டுக்கல் மாவட்டத்தில் உள்ள முக்கிய அணைகளின் நீர்பிடிப்பு பகுதிகளில் மழை இல்லாததால் அணைகளுக்கு நீர்வரத்து பல நாட்களாக இல்லை. இதனால் அணைகளின் நீர் இருப்பு வெகுவாக குறைந்து வருகிறது.
திண்டுக்கல் மாவட்டத்தின் குடிநீர், விவசாய பாசனத்திற்கு ஆதாரமாக விளங்குவது பாலாறு பொருந்தலாறு அணை, பரப்பலாறு அணை, குதிரையாறு அணை, வரதமாநதி அணை, நாங்காஞ்சியாறு அணைகள் உள்ளன.
இந்நிலையில் அணைகளின் நீர்பிடிப்பு பகுதிகளில் போதிய மழை இல்லாததால் அணைகளுக்கு நீர்வரத்து இன்றி வறண்டு வருகின்றன. குறிப்பாக பழநி, ஒட்டன்சத்திரம் பகுதிகளில் அணைகளின் நீர்பிடிப்பு பகுதிகளில் மழை இல்லாததால் நீர்வரத்து இல்லை. இதனால் கோடை காலம் துவங்கும் நிலையில் குடிநீருக்கு பற்றாக்குறை ஏற்படும் நிலை உள்ளது. பழநி நகரம் ஆயக்குடி மற்றும் சுற்றுவட்டார கிராமங்கள் பெருமளவில் பாதிக்கப்படும்.
இதுபோல் குளத்து பாசனம் நடக்கும் வயல்களில் தண்ணீர் இல்லாததால் வறண்டு விடும் சூழல் உள்ளது. எனவே விவசாயத்திற்கு நீரை சிக்கனமாக பயன்படுத்தும் நிலை ஏற்பட்டுள்ளது. இரண்டு போகம் விளையும் நெல் வயல்களில் தண்ணீரை சிக்கனமாகவும், ஒருபோகம் விளையும் நெல் வயல்களில் நடவு செய்யாமலும் இருக்கும் சூழல் உள்ளது.
இந்நிலையில் கோடை மழையை மட்டுமே நம்பி விவசாயத்தில் ஈடுபட்டால் ஏமாறும் நிலை ஏற்படும்.
கோடை மழை துவங்கிய பின் நடவு பணியைத் துவங்கினால் இரண்டாம் போகத்தில் தண்ணீர் பற்றாக்குறை ஏற்படுவதை தவிர்க்கலாம். குளத்து பாசனம் நடக்கும் வயல்களில் நீர் அளவை பொறுத்து விவசாயிகள் திட்டமிட வேண்டும் என விவசாய சங்கத்தினர் தெரிவிக்கின்றனர்.
நீர் இருப்பு விவரம் நேற்று காலை நிலவரப்படி மாவட்டத்தின் மிகப்பெரிய அணையான 65 அடி உயரம் தண்ணீர் தேக்கி வைக்கும் கொள்ளளவு உடைய பாலாறு பொருந்தலாறு அணையில் 40.45 அடிக்கு தண்ணீர் உள்ளது. 29 கனஅடி நீர் வெளியேற்றப்படுகிறது.
இதுபோல் 90 அடி உயரமுள்ள பரப்பலாறு அணையில் 72.82 அடி தண்ணீர் உள்ளது. 3 கனஅடி நீர் வெளியேற்றப்படுகிறது. 80 அடி உயரமுள்ள குதிரையாறு அணையில் 58.15 அடி உயரம் தண்ணீர் உள்ளது. 26 கனஅடி நீர் வெளியேற்றப்படுகிறது. 66.47 அடி உயரமுள்ள வரதமாநதி அணையில் 43.34 அடி தண்ணீர் உள்ளது. 10 கனஅடி நீர் வெளியேற்றப்படுகிறது.
27 அடி உயரமுள்ள குடகனாறு அணையில் 18 அடி உயரம் தண்ணீர் உள்ளது. தண்ணீர் வெளியேற்றம் இல்லை. 39.37 அடி உயரமுள்ள நாங்காஞ்சியாறு அணையில் 20.9 அடி உயரம் தண்ணீர் உள்ளது. தண்ணீர் வெளியேற்றம் இல்லை.

