UPDATED : செப் 21, 2026 03:58 PM
ADDED : செப் 21, 2026 03:11 PM
ஆத்துார்:ஆத்துார் அரசு மருத்துவமனையில் காசநோய் ஒழிப்பு, தொற்றாளர் நலக்கூட்டமைப்பு சார்பில் ஆதரவற்ற பின்தங்கிய காசநோயாளிகளுக்கு ஊட்டச்சத்து பெட்டகம் வழங்கல் நடந்தது.
டாக்டர் அரவிந்த் நாராயணன் தலைமை வகித்தார். டாக்டர் கவுசிகன் ஊட்டச்சத்து, தன்சுத்த பராமரிப்பு குறித்த ஆலோசனைகள் வழங்கினார். காசநோய் பிரிவு பொறுப்பு மருத்துவ அலுவலர் சந்திரப்பிரியா, சித்தா பிரிவு மருந்தாளுனர் மனோகரன், அச்சாணி அமைப்பு ஒருங்கிணைப்பாளர் ராமு, 'சி' அறக்கட்டளை ஒருங்கிணைப்பாளர் அழகர்சாமி முன்னிலை வகித்தனர்.
காசநோயாளிகளுக்கு சுண்டல், முட்டை, நிலக்கடலை, பருப்பு, பாசிப்பயறு, பச்சைப்பயறு ஆகிய பொருட்கள் கொண்ட பெட்டகம் வழங்கப்பட்டது. அரசு மருத்துவமனை நம்பிக்கை மைய ஆலோசகர் கண்ணன், ஆய்வக நுட்பவியலாளர் லோகநாயகி தலைமையிலான குழுவினர் ஏற்பாடுகளை செய்திருந்தனர்.
