/
உள்ளூர் செய்திகள்
/
திண்டுக்கல்
/
காணப்பாடியில் பாதுகாப்பற்ற ரோட்டினால் மக்கள் அச்சம்
/
காணப்பாடியில் பாதுகாப்பற்ற ரோட்டினால் மக்கள் அச்சம்
காணப்பாடியில் பாதுகாப்பற்ற ரோட்டினால் மக்கள் அச்சம்
காணப்பாடியில் பாதுகாப்பற்ற ரோட்டினால் மக்கள் அச்சம்
ADDED : அக் 12, 2025 05:15 AM

வடமதுரை : காணப்பாடியில் குளக்கரை வழியே செல்லும் வடமதுரை - அக்கரைப்பட்டி ரோட்டில் பாதுகாப்பு குறைபாடுகள் அதிகம் இருப்பதால் மக்களிடம் அச்சம் உள்ளது.
வடமதுரையில் இருந்து சித்துார், நந்தவனப்பட்டி, காணப்பாடி, பாறைப்பட்டி, நரிவிலாப்பட்டி, அக்கரைப்பட்டி, வங்கமனுாத்து, அதிகாரிபட்டி, காம்பார்பட்டி வழியே முக்கிய ரோடு கோபால்பட்டி அருகில் திண்டுக்கல் - காரைக்குடி ரோட்டில் சேர்கிறது.
இந்த ரோட்டில் பல இடங்கள் அகலமாக்கப்பட்ட போதிலும் காணப்பாடி பகுதியில் மட்டும் ஆபத்தான நிலையிலே உள்ளது.
இங்குள்ள மந்தைக்குளத்தில் கரைப்பகுதியில் சிறிய ரோடாக உருமாறி தற்போது முக்கிய நகரங்களை இணைக்கும் பிரதான ரோடாகி உள்ளது.
உயரமான கரையில் ரோடு அமைந்ததால் முறையான அளவில் அகலப்படுத்துதல் பணி நடக்காமல் இருக்கும் இடத்திற்கு தகுந்தாற்போல ரோடு அமைக்கப்பட்டுள்ளது.
வாகனங்கள் கீழே விழுவதை தடுக்க அமைக்கப்பட்ட இரும்பு தடுப்புகள் ரோடு விரிவாக்க பணியில் கழற்றப்பட்ட பின்னர் மீண்டும் பொருத்தாமல் கிடப்பில் வைத்துள்ளனர். ரோட்டோர மின்கம்பங்களும் சாய்ந்த நிலையில் விபத்து ஆபத்தாக உள்ளது.
வாகனங்களின் எண்ணிக்கை நாளுக்கு நாள் அதிகரித்து வரும் நிலையில் அதற்கேற்ப இப்பகுதி ரோட்டையும் மறுசீரமைக்க நெடுஞ்சாலைத்துறை நடவடிக்கை எடுக்க வேண்டும்.
-விபத்து வாய்ப்பு கே.சுப்பையா, ஊர் பிரமுகர்: காணப்பாடியில் இருந்து நந்தவனப்பட்டி வழியே வடமதுரையை இணைக்கும் ரோடு மந்தைக்குளத்தின் கரையில் அமைந்துள்ளது. இந்த கரைப்பகுதியில் மண் நிரப்பி தடுப்புச்சுவர் கட்டமைப்புடன் அகலமாக்க வேண்டும். உயரமாக கரையில் ரோடு செல்லும் நிலையில் வளைவும் விபத்து வாய்ப்பை அதிகமாக்குகிறது. மறுகட்டமைப்பில் ரோட்டை நேராக்கவும் முயற்சிக்க வேண்டும். இங்கு சாய்ந்த நிலையில் இருக்கும் மின்கம்பங்களையும் நேராக நிமிர்த்தி ஸ்திரமாக இருக்கும் வகையில் பராமரிப்பது அவசியம்.
விளக்கு வசதியின்றி விபத்து -எம்.குழந்தைவேல், சமூக ஆர்வலர், குப்பமுத்துபட்டி: காணப்பாடி மந்தைக்குளத்தின் கரைப் பகுதியில் உயரமாக ரோடு செல்வதால் வாகனங்கள் கீழே விழுந்து விபத்தில் சிக்குவதை தடுக்க பல இடங்களில் இருபுறமும் இரும்பு பாதுகாப்பு தடுப்புகள் நிறுவப்பட்டன. பராமரிப்பு பணி நடவடிக்கையின் போது இரும்பு தடுப்புகள் கழற்றப்பட்டு அதே பகுதியில் நீண்ட மாதங்களாக கிடக்கின்றன.
இவற்றை மீண்டும் பொருத்த நடவடிக்கை எடுக்க வேண்டும். போதிய தெரு விளக்கு வசதியில்லாமல் அதிகளவில் விபத்துகள் நடக்கின்றன.