/
உள்ளூர் செய்திகள்
/
திண்டுக்கல்
/
போதை ஆசாமிகளால் தொல்லை; 4வது வார்டு மக்கள் அவதி
/
போதை ஆசாமிகளால் தொல்லை; 4வது வார்டு மக்கள் அவதி
ADDED : பிப் 14, 2025 05:45 AM

பழநி: பழநி நகராட்சி நான்காவது வார்டு பகுதியில் போதை ஆசாமிகளின் தொல்லை நாளுக்கு நாள் அதிகரித்து வருவதால் அப்பகுதியினர் அச்சம் அடைந்துள்ளனர்.
குபேர பட்டினம், நேருஜி தெரு, பழனிச்சாமி வீதி, தண்டபாணி வீதி, கேப்டன் சுப்பிரமணி வீதி, ஏசிசி ரோடு, கண்ணகி ரோடு, ஓம் சண்முகா நகர், விநாயகா மில் ரோடு பகுதிகளை உள்ளடக்கிய இந்த வார்டில் தினமும் போதை வஸ்துகளை பயன்படுத்தும் ஆசாமிகளின் நடமாட்டம் அதிகரித்து வருகிறது. மாலை, இரவு நேரங்களில் பெண்கள் நடமாட அச்சப்படுகின்றனர். இதை நிவர்த்தி செய்ய நகராட்சி நிர்வாகம் முன் வர வேண்டும்.
நடவடிக்கை எடுக்கலாம்
பிரபாகரன், டீக்கடை உரிமையாளர் :தெரு நாய் தொல்லை அதிக அளவில் உள்ளது. கண்காணிப்பு கேமரா பொருத்தப்பட வேண்டும். அங்கன்வாடி மையத்தை சரி செய்ய வேண்டும். பயன்பாடு இல்லாத கிணற்றை பயன்படுத்த நடவடிக்கை எடுக்க வேண்டும் அல்லது அதனை மூடவேண்டும். வார்டில் செயல்பட்டு வந்த நுாலகம் மீண்டும் செயல்பட நடவடிக்கை எடுக்க வேண்டும்.
சேதமான சாலைகள்
பாலமுருகன், தனியார் நிறுவன ஊழியர் : வார்டில் புதிதாக அமைக்கப்பட்ட பாலங்கள் அருகே சாலை சேதமடைந்துள்ளது. ரேஷன் கடை அமைக்கப்பட வேண்டும். சாக்கடைகளை துார்வார வேண்டும். சாக்கடைகளை புதிதாக அமைப்பதோடு குப்பையை முறையாக அகற்ற வேண்டும்.
நாய் தொல்லை அதிகம்
விஜய் வெங்கடேஷ், வியாபாரி : புது தாராபுரம் சாலையில் ரயில்வே கேட் அடைக்கப்படும்போது நெடுநேரம் வாகனங்கள் காத்திருக்கும் நிலை ஏற்படுகிறது. ஆம்புலன்ஸ் உட்பட்ட வாகனங்கள், அவசரமாக மருத்துவமனை செல்லும் நபர்கள் சிரமம் அடைகின்றனர். நாய் தொல்லையும் அதிகம் உள்ளது.
கேமரா பொருத்த நடவடிக்கை
கலையரசி, கவுன்சிலர், (தி.மு.க.,) : தெரு நாய்களை கட்டுப்படுத்த நகராட்சி மூலம் நடவடிக்கை எடுக்க பேசி வருகிறேன். வார்டில் உள்ள சேதமடைந்த பாலம் ,சாலைகள் சரி செய்யப்படும். கண்காணிப்பு கேமரா பொருத்த நடவடிக்கை எடுக்கப்படும். பல்வேறு பகுதியில் புது சாலைகள் அமைக்கப்பட்டுள்ளன. அங்கன்வாடி மையம் அமைக்கப்படும். புது தாராபுரம் சாலையில் மேம்பால பணிகளுக்கு இட கையகப்படுத்தும் பணி நடைபெற்று வருகிறது. போதை ஆசாமிகளை கட்டுப்படுத்த போலீசார் ரோந்து பணியை தீவிர படுத்த வலியுறுத்தப்படும் என்றார்.

