ADDED : மே 24, 2026 04:01 AM
ஒட்டன்சத்திரம்: ஒட்டன்சத்திரம் பஸ் ஸ்டாண்ட்டில் நடைபாதைகளை ஆக்கிரமித்துள்ள கடைகளால் பயணிகள் நடந்து செல்ல சிரமப்படுகின்றனர்.
ஒட்டன்சத்திரம் நகராட்சியில் உள்ள பஸ் ஸ்டாண்ட்டிற்கு நாள்தோறும் நுாற்றுக்கணக்கான பஸ்கள் வந்து செல்கின்றன. இவற்றில் ஆயிரக்கணக்கான பயணிகள் பல்வேறு ஊர்களுக்கு சென்று வருகின்றனர்.
பஸ் ஸ்டாண்டின் கிழக்கு பகுதியில் டவுன் பஸ்களும், மேற்கு பகுதியில் வெளியூர் செல்லும் பஸ்களும் நிறுத்தப்படுகின்றன. கிழக்கில் இருந்து மேற்கு பகுதிக்கு செல்ல பல நடைபாதைகள் உள்ளன. இவற்றை சிறு வியாபாரிகள் ஆக்கிரமித்து கடைகள் அமைத்து வியாபாரம் செய்கின்றனர்.
பஸ் ஸ்டாண்டில் ஒதுக்கப்பட்ட அளவை காட்டிலும் சில அடிகள் அதிகரித்து கடைகளை விரிவாக்கம் செய்து பயணிகள் நடந்து செல்லும் பாதையை ஆக்கிரமித்து உள்ளனர். இதனால் அவசரமாக சென்று பஸ்சை பிடிக்கும் நிலையில் உள்ள பயணிகள் இந்த குறுகிய நடைபாதை வழியாக செல்ல சிரமப்படுகின்றனர்.
நடைபாதை ஆக்கிரமிப்புகளை அகற்றி பயணிகள் சிரமமின்றி நடந்து செல்ல நகராட்சி நடவடிக்கை எடுக்க வேண்டும்.
