ADDED : ஜூலை 15, 2026 11:04 PM

கன்னிவாடி: திண்டுக்கல் மாவட்டம் கசவனம்பட்டி அருகே மளிகை கடையில் பெட்ரோல் குண்டு வீசப்பட்ட சம்பவத்தில் 6 பேரை போலீசார் கைது செய்தனர்.
கசவனம்பட்டி அருகே குரும்பபட்டியை சேர்ந்த ராஜேஷ் மனைவி சரோஜா 37, வீட்டின் முன் மளிகை கடை நடத்துகிறார். இவரது குடும்பத்திற்கும், உறவினரான திருமலைராயபுரம் முருகன் குடும்பத்திற்கும் முன்விரோதம் உள்ளது. முருகன் மகன் சபரீஷ், உறவினர் பழையபட்டி அஜித்குமார் ஆகியோர் சரோஜாவின் கடை மீது பெட்ரோல் குண்டு வீச முடிவெடுத்தனர்.
இவர்களின் துாண்டுதலில் நண்பர்களான நெய்காரபட்டி கிருஷ்ணாபுரம் கார்த்திகேயன் 18, நாகப்பன்பட்டி மூனுார் நிர்மல் 19, சுள்ளெரும்பு மோகன் 18, திண்டுக்கல் குடைபாறைப்பட்டி சந்தோஷ்குமார் 18, இரு சிறுவர்கள் என 6 பேர் கூலிப்படையாக செயல்பட்டு பெட்ரோல் குண்டு வீசினர். இவர்கள் 6 பேரையும் போலீசார் கைது செய்தனர். இதே கும்பல் ஒட்டன்சத்திரம் அருகே இடையகோட்டை நாவலுாத்து பகுதியிலும் முன்விரோத பிரச்னையில் மூதாட்டி வீட்டில் பெட்ரோல் குண்டு வீசியது.
