ADDED : பிப் 06, 2026 06:09 AM
திண்டுக்கல்,சட்டசபை தேர்தல் பாதுகாப்பு பணிகளை கவனிக்க டி.எஸ்.பி., தலைமையில் தனிப்பிரிவு துவங்கப்பட்டு 15 பேர் நியமிக்கப்பட்டனர்.
தமிழக சட்டசபை தேர்தலை யொட்டி தேர்தல் முன்னேற்பாடு, பாதுகாப்பு பணிகள் துவங்கப்பட்டுள்ளன. தேர்தல் பாதுகாப்பு பணிக்கென ஒவ்வொரு மாவட்டத்திலும் போலீஸ் தனிப்பிரிவு துவங்கப்படுகிறது. அதன்படி திண்டுக்கல் எஸ்.பி.,அலுவலகத்தில் நடந்த ஆலோசனைக்கூட்டத்தின் முடிவின்படி டி.எஸ்.பி. சுபக்குமார் தலைமையில் 2 இன்ஸ்பெக்டர்கள், 2 எஸ்.ஐ.,கள் என 15 பேர் அடங்கிய தேர்தல் தனிப்பிரிவு துவங்கப்பட்டுள்ளது.
இதற்காக அலுவலகம் வழங்கப்பட்டுள்ள நிலையில் இக்குழுவினர் முன்னேற்பாடு பணிகளை மேற்கொள்ள உள்ளனர்.திண்டுக்கல், பழநி, ஒட்டன்சத்திரம், ஆத்துார், நிலக்கோட்டை (தனி), நத்தம், திண்டுக்கல், வேடசந்துார் என 7 சட்டமன்ற தொகுதிகளில் 2301 ஓட்டுச்சாவடிகள் உள்ளன. இதில் பதட்டமான ஓட்டுச்சாவடிகளை கண்டறிதல் அவற்றுக்கு துணை ராணுவம், போலீஸ் பாதுகாப்பை உறுதி செய்தல், மின்னணு ஓட்டுப்பதிவு இயந்திரங்களை பாதுகாப்பாக கொண்டு வருதல், ஓட்டு எண்ணும் மையத்துக்கு பாதுகாப்பு அளித்தல் உள்ளிட்ட பணிகளை இப்பிரிவு போலீசார் கவனிப்பர் என தெரிவிக்கப்பட்டுள்ளது.
