கார் விபத்தில் 3 பேர் காயம்
வேடசந்துார்: சேலம் பெத்தநாயக்கன்பாளையத்தை சேர்ந்தவர் ராயத்துரை 36. இவர் தனது மகன், மகளுடன் கரூர் - திண்டுக்கல் நெடுஞ்சாலையில் காரை ஓட்டி வந்தார். வேடசந்துார் காக்காத்தோப்பு பிரிவு அருகே கட்டுப்பாட்டை இழந்த கார் ரோட்டோர தடுப்புச்சுவரில் மோதியது. இதில் முன் பகுதி நொறுங்கியது. மூன்று பேரும் காயம் அடைந்தனர். வேடசந்துார் போலீசார் விசாரிக்கின்றனர்.
கஞ்சா வைத்திருந்த 11 பேர் கைது
பழநி: பழநி- திண்டுக்கல் சாலையில் கல்லூரிகள் செயல்படும் பகுதி அருகே டவுன் போலீசார் ரோந்து சென்றனர். அங்கு கும்பலாக நின்றிருந்தவர்கள் போலீசாரை பார்த்ததும் தப்பி ஓடினர். அவர்களை பிடித்து சோதனை செய்ததில் கஞ்சா வைத்திருந்தது தெரியவந்தது. 11 பேரை கைது செய்த போலீசார் 250 கிராம் கஞ்சாவை பறிமுதல் செய்தனர்.
பணம் பறித்த வாலிபர் கைது
நத்தம்: மதுரை மாவட்டம் மேலூரை சேர்ந்தவர் காதர்பாட்சா 46. நத்தம் அண்ணா நகரில் தையல் கடை நடத்தி வருகிறார். இவர் நேற்று கடையில் இருந்த போது நத்தத்தை சேர்ந்த சாதிக்பாட்சா 29, அவரிடம் கத்தியை காட்டி மிரட்டி பணத்தை பறித்து சென்றார். புகாரின் பேரில் எஸ்.ஐ., மலைச்சாமி வழக்குப் பதிந்து சாதிக்பாட்சாவை கைது செய்தார்.
35 கிலோ குட்கா பறிமுதல்
திண்டுக்கல்: ஒட்டன்சத்திரம், ஆத்தூர், நிலக்கோட்டை, வடமதுரை உள்ளிட்ட பகுதியில் உணவு பாதுகாப்புத் துறையினர் சோதனை நடத்தினர். இதில் 13 கடைகளில் அரசால் தடை செய்யப்பட்ட 35 கிலோ புகையிலை பொருட்களை பறிமுதல் செய்து கடைகளுக்கு 'சீல்' வைத்தனர். 2 கடைகளுக்கு தலா ரூ.50 ஆயிரம், 11 கடைகளுக்கு தலா ரூ.25 ஆயிரம் அபராதம் விதித்தனர்.

