UPDATED : மே 11, 2026 11:05 PM
ADDED : மே 11, 2026 04:40 PM

பழநி:பழநி திருவள்ளுவர் சாலையில் உழவர் சந்தை முன் ஆக்கிரமிப்பு கடைகள் காரணமாக தினந்தோறும் போக்குவரத்து நெரிசல் ஏற்பட்டு பொதுமக்கள் அவதிப்படுகின்றனர்.
பழநி நகரில் திருவள்ளுவர் சாலை உழவர் சந்தை, மருத்துவமனை, கோயில்கள், வங்கிகள், எம்.எல்.ஏ., அலுவலகம் என பொதுமக்கள் அதிகம் கூடும் பகுதியாக உள்ளது. இதனால் போக்குவரத்து நிறைந்து உள்ளது. இதோடு உழவர் சந்தை அருகே சிறுவியாபாரிகள் ரோட்டோரங்களை ஆக்கிரமிப்பு செய்து தள்ளுவண்டிகளில் காய்கறி, பழங்களை விற்பனை செய்கின்றனர். இந்த கடைகளில் விற்கப்படும் பொருட்கள், விலை விவரம் ஒலிப்பெருக்குகளில் தொடர்ந்து தெரிவிக்கப்படுகிறது. அதிகாலை முதல் இரவு வரை ஒலிப்பெருக்கிகள் சத்தமிடுவதால் அப்பகுதி மக்களுக்கு இடையூறு ஏற்படுகிறது. உழவர் சந்தை வருவோருக்கு வாகனங்களை நிறுத்த சரியான இடம் இல்லாததால் இவர்கள் ஆங்காங்கே ரோட்டோரம் வாகனங்களை நிறுத்திவிட்டு செல்வதால் அடிக்கடி போக்குவரத்து நெரிசலும் ஏற்பட மக்கள் தினமும் அவதிக்கு ஆளாகின்றனர்.
..........
பூங்கா பணிகளை முடியுங்க யோகேஷ், தொழில் முனைவோர், அண்ணா நகர்: பழநி திருவள்ளுவர் சாலையில் உழவர் சந்தை அருகே உள்ள பூங்கா பல நாட்களாக செயல்படாத நிலையில் தற்போது பராமரிப்பு பணிகள் நடந்து வருகிறது. இதனால் பூங்கா, உழவர் சந்தை அருகே தள்ளுவண்டிகள், பெட்டிக்கடைகள் என ஆக்கிரமிப்புகள் அதிகம் உள்ளது. காலை நேரத்தில் போக்குவரத்து நெரிசல் ஏற்பட்டு மக்கள் அவதிப்படுகின்றனர். இதை கருதி பூங்கா பணியினை விரைந்து முடித்து பொதுமக்கள் பயன்பாட்டிற்கு கொண்டு வர வேண்டும். ------------------
கடைகளுக்கு மாற்று இடம் நாகேஸ்வரன், சமூக ஆர்வலர், பழநி: உழவர் சந்தை முன் வாகனங்களை நிறுத்த முடியாத அளவுக்கு கடைகள் ஆக்கிரமித்து உள்ளன. இதனால் வாகனங்களை ரோட்டில் நிறுத்தும் சூழல் உள்ளதால் நெரிசல் ஏற்படுகிறது. இங்குள்ள கடைகளுக்கு மாற்று இடம் வழங்கி ஆக்கிரமிப்புகளை அகற்றுவதோடு பொதுமக்களுக்கும் போதிய வசதி செய்து தர வேண்டும்.
தீர்வு:
உழவர் சந்தை முன் கடைகள் வைக்க அனுமதிக்கக்கூடாது. வியாபாரிகளுக்கு வேறு தனி இடம் ஒதுக்கி தர வேண்டும். நகராட்சி சார்பில் அனுமதித்துள்ள கடைகளை ஆர்.எப்.,ரோடு பகுதி பழைய இடங்களுக்கு மாற்ற வேண்டும். உழவர் சந்தை பகுதியில் வாகனங்களை முறையாக நிறுத்த இடம் வசதி ஏற்படுத்தி கொடுக்க வேண்டும்.
.......
