ADDED : செப் 19, 2026 05:54 PM
சாணார்பட்டி, செப்.20-
சின்னக்காளிபட்டி மாணவர்கள் நலன் கருதி காலை, மாலை நேரங்களில் அரசு பஸ் இயக்கக் கோரி மறியலில் ஈடுபட்டனர்.
சாணார்பட்டி அருகே அஞ்சுகுளிப்பட்டி சின்னக்காளிபட்டியில் 200க்கும் மேற்பட்ட குடும்பங்கள் வசித்து வருகின்றனர். அங்கிருந்து மாணவர்கள் பலர் அஞ்சுகுழிப்பட்டி, கோபால்பட்டி அரசு பள்ளிகளுக்கும், திண்டுக்கல் கல்லுாரிக்கும் பஸ்சில் சென்று வருகின்றனர்.
சின்னக்காளிப்பட்டிக்கு தினமும் மதியம் 12:00 மணி, இரவு 7:00 மணிக்கு அரசு டவுன் பஸ் இயக்கப்படுகிறது. பள்ளி, கல்லுாரி நேரத்தில் பஸ் எதுவும் இயக்கப்படாததால் ஆட்டோக்கள் அல்லது 5 கி.மீ., துாரம் நடந்து அஞ்சுகுளிபட்டிக்கு வந்து அங்கிருந்து அரசு டவுன் பஸ்ஸில் கோபால்பட்டி, திண்டுக்கல் செல்ல வேண்டிய நிலை உள்ளது. மாணவர்கள் நலன் கருதி அரசு டவுன் பஸ் இயக்க வேண்டும் என பல ஆண்டுகளாக கோரிக்கை எழுந்த நிலையிலும் இதுவரை நடவடிக்கை இல்லை.
இந்நிலையில் நேற்று மா.கம்யூ., சாணார்பட்டி ஒன்றியக்குழு உறுப்பினர் செல்வம் தலைமையில் அக்கட்சியினர் அஞ்சுகுளிப்பட்டி பஸ் ஸ்டாப்பில் சின்னக்காளிபட்டிக்கு செல்லும் அரசு டவுன் பஸ்சை மறித்து மறியலில் ஈடுபட்டனர்.
அவர்களுடன் போலீசார், அரசு போக்குவரத்து துறை அதிகாரிகள் பேச்சுவார்த்தை நடத்தினர். பள்ளி நாட்களில் சின்னகாளிப்பட்டிக்கு காலை 7:30, மாலை 5:00 மணிக்கு டவுன் பஸ் இயக்க நடவடிக்கை எடுக்கப்படும் என உறுதியளித்தனர். இதையடுத்து மறியல் கைவிடப்பட்டது.
