UPDATED : அக் 06, 2026 12:00 AM
ADDED : அக் 05, 2026 05:45 PM
கோபால்பட்டி: கோபால்பட்டி அருகே மாதர் சங்கம் சார்பில், அரசு டாஸ்மாக் கடையை அகற்றக்கோரி கடைக்கு பூட்டு போடுவதற்காக நடந்த போராட்டத்தில் மாதர் சங்கத்தினருக்கும் போலிசாருக்கும் வாக்குவாதம் ஏற்பட்டது.
கோபால்பட்டியில் அரசு டாஸ்மாக் கடை (எண் 3305) இயங்குகிறது. இதன் அருகே அரசுப் பள்ளி, குடியிருப்புகள் உள்ளன. இக்கடையில் மதுபாட்டில்களை வாங்கிச் செல்லும் மது பிரியர்கள் ரோட்டில் அமர்ந்து மது குடிக்கின்றனர். இதனால் கோபால்பட்டியில் இருந்து பாறைப்பட்டி, ராமராஜபுரம், பள்ளபட்டி, மணியக்காரன்பட்டி, வி.எஸ்., கோட்டை உள்ளிட்ட பல்வேறு கிராமங்களுக்கு செல்லும் பொது மக்களுக்கு இடையூறு ஏற்படுகிறது. மாணவ, மாணவிகள் நடந்து செல்ல முடியாத நிலையும் ஏற்பட்டுள்ளது. இதனால் இந்த டாஸ்மாக் கடையை அகற்ற வேண்டும் என, மாவட்ட நிர்வாகத்திற்கு மனு அளித்தும் நடவடிக்கை இல்லை. ஆத்திரமடைந்த கோபால்பட்டி பொது மக்களுடன் இணைந்து மாதர் சங்கத்தைச் சேர்ந்த பெண்கள் கோபால்பட்டியில் நேற்று ஊர்வலமாக சென்று மதுக்கடையை பூட்டுப்போட முயற்சித்தனர். ஊர்வலம் சிறிது துாரம் சென்ற போது போலீசார் அவர்களை வழிமறித்தனர். இதனால் போலீசாருக்கும் போராட்டத்தில் ஈடுபட்டவர்களுக்கும் இடையே சிறிது நேரம் வாக்குவாதம் ஏற்பட்டது. பின்னர் அவர்களின் கோரிக்கையை கேட்ட மாவட்ட சைபர் கிரைம் ஏ.டி.எஸ்.பி., தெய்வம், நத்தம் இன்ஸ்பெக்டர் பொன் குணசேகரன், சாணார்பட்டி இன்ஸ்பெக்டர் பிரபாகரன் உள்ளிட்ட போலீசார் மாவட்ட நிர்வாகத்திடம் பேசி உரிய நடவடிக்கை எடுக்கப்படும் என உறுதி அளித்தனர். அதன்பின் பூட்டு போடும் போராட்டத்தில் ஈடுபட்டவர்கள், கலைந்து சென்றனர்.
