ADDED : ஆக 06, 2025 08:53 AM

திண்டுக்கல் : திண்டுக்கல்லில் விட்டு விட்டு பெய்த மழை இரவு வரை நீடித்த துாறலால் குளிர்ச்சியான காலநிலை நிலவியது.
திண்டுக்கல்லை பொறுத்தவரை ஜூன் துவக்கம் முதலே கோடையை காட்டிலும் வெயிலின் தாக்கம் அதிகமிருந்தது.
பகலில் கொளுத்துவது, அவ்வப்போது பெய்த சிறு மழையும் இரவில் உஷ்ணமாக மாறி வீட்டிற்குள் புழுக்கத்தை ஏற்படுத்தியது.நேற்று வழக்கம் போல் காலை வெயில் அடித்தாலும் மதியம் 2 :00 மணி முதலே வானம் மேக மூட்டத்துடன் காணப்பட்டது.
மதியம் 3:30 மணிக்கு தொடங்கிய மழை ஒரு மணி நேரம் வரை லேசான துாறலுடன் பெய்தது. மாணவர்கள், பணி முடிந்து வீடு திரும்புவோர் ஆங்காங்கே ஒதுங்கி நின்றனர். இரவு வரை லேசான துாரல் விழுந்தது.
ஒட்டன்சத்திரம் : நேற்று மதியம் 2:00 மணிக்கு காவேரியம்மாபட்டி, பெரியகோட்டை, தங்கச்சியம்மாபட்டி, சின்னையகவுண்டன்வலசு, அம்பிளிக்கை, கள்ளிமந்தையம் சுற்றிய கிராமப் பகுதிகளில் ஒரு மணி நேரத்திற்கும் மேலாக கனமழை பெய்தது. தாழ்வான பகுதிகள், ரோட்டின் ஓரங்களில் மழை நீர் தேங்கியது.
ஆடி மாதம் பெய்த இம்மழையால் மானாவாரி நிலங்களில் உழவு செய்யும் சூழல் உருவாகி இருப்பதாக விவசாயிகள் கூறினர்.

