UPDATED : ஆக 29, 2026 09:31 PM
ADDED : ஆக 29, 2026 08:51 PM
கன்னிவாடி:காப்பிளியபட்டியில் கழிவுநீர் வடிந்து செல்ல வழியின்றி ரோடு அமைக்கப்பட்டதால் குடியிருப்பு பகுதியில் தேங்குகிறது. சுகாதாரக்கேட்டில் மக்கள் தவிக்கின்றனர்.
ரெட்டியார்சத்திரம் ஒன்றியம் டி.புதுப்பட்டி ஊராட்சி காப்பிளியபட்டியில் 200க்கும் மேற்பட்ட குடும்பங்கள் உள்ளனர். இங்கு வீட்டு குடிநீர் இணைப்பு வழங்குவதில் அலட்சியம் நீடிக்கிறது.
தெருவிளக்கு, சுகாதாரம் சார்ந்த பிரச்னைகள் கண்டு கொள்ளப்படவில்லை. போதிய கழிவுநீர் கால்வாய் வசதி இல்லை. குடியிருப்புகளை சூழ்ந்து மழை, கழிவுநீர் தேங்கி நிற்கும் அவலம் தொடர்கிறது. கண்ட கண்ட இடங்களில் குப்பைக்கழிவுகள் குவித்து எரிக்கின்றனர். கழிவுகளை முறையாக திடக்கழிவு மேலாண்மைக்கு உட்படுத்துவது இல்லை.
ரோடு சீரமைப்பு பணியில் அதிகாரிகள் கண்காணிப்பு இல்லை. மழை, கழிவுநீர் கடந்து செல்ல வசதியின்றி ரோடு அமைத்துள்ளனர். பல தெருக்களில் சாரல் மழைக்கும் தண்ணீர் தேங்குகிறது. சாக்கடை நீரும் குடியிருப்புகளை சூழ்ந்து தேங்குகிறது. துர்நாற்றத்துடன் சுகாதாரக்கேடு ஏற்படுகிறது. இவற்றிற்கு தீர்வு காண ஊராட்சி நிர்வாகம் நடவடிக்கை எடுக்க வேண்டும் என கோரிக்கை எழுந்துள்ளது.
