காலி மதுப்பாட்டில் திரும்ப பெறுவதில் சர்வர் பிரச்னை: மூடப்பட்ட 65 டாஸ்மாக் கடைகள்
காலி மதுப்பாட்டில் திரும்ப பெறுவதில் சர்வர் பிரச்னை: மூடப்பட்ட 65 டாஸ்மாக் கடைகள்
UPDATED : நவ 01, 2026 09:11 PM
ADDED : நவ 01, 2026 09:06 PM
திண்டுக்கல்:
திண்டுக்கல் மாவட்டத்தில் டாஸ்மாக் கடைகளில் காலி மதுப்பாட்டில்களை திரும்ப பெறுவதில் ஏற்பட்ட சர்வர் பிரச்னையால் பாட்டிலுக்கு ரூ.10 திரும்ப வழங்க முடியவில்லை. இதனால் ஏற்பட்ட வீண் பதற்றத்தை தணிக்க மாவட்டம் முழுவதும் 65 டாஸ்மாக் கடைகள் மூடப்பட்டன.
திண்டுக்கல் மாவட்டத்தில் மொத்தம் 115 டாஸ்மாக் கடைகள் செயல்படுகின்றன. மதுபாட்டிலுக்கு ரூ.10 விலை உயர்த்தப்பட்ட நிலையில் டாஸ்மாக் கடையில் காலி மதுபாட்டில்களை திரும்ப ஒப்படைத்து ரூ.10 திரும்ப பெற்றுக் கொள்ளலாம் எனக் கூறப்பட்டது. மேலும் காலி மதுபாட்டில்களை ‘ஸ்கேனர்’ கருவி மூலம் ஸ்கேன் செய்த பிறகே வாங்க வேண்டும் எனவும் அரசு வழிகாட்டுதல்கள் வழங்கி உத்தரவிட்டுள்ளது.அதன்படி நேற்று, மாவட்டத்தில் உள்ள பல டாஸ்மாக் கடைகளில் காலி மதுபாட்டில்களை ஊழியர்கள் திரும்ப வாங்கும் போது சர்வர் பிரச்னையால் ‘ஸ்கேனர்’ கருவி செயல்படவில்லை. இதனால் காலி மதுபாட்டில்களை வாங்கிக்கொண்டு ரூ.10 திரும்ப ஒப்படைப்பதில் சிக்கல் ஏற்பட்டது. இதனால் ஆத்திரமடைந்த மது அருந்துவோர் டாஸ்மாக் ஊழியர்களிடம் வாக்குவாதம் செய்தனர். பதற்றத்தை தணிப்பதற்காக டாஸ்மாக் கடைகளை மூடிவிட்டு ஊழியர்கள் சென்றனர். இதேபோல மாவட்டம் முழுவதும் ஏற்பட்ட பிரச்னையில் மொத்தம் 65 டாஸ்மாக் கடைகள் மூடப்பட்டன.
கடைகள் மீது மதுபாட்டில் வீச்சுக்ஷ
கோபால்பட்டி அரசு டாஸ்மாக் மதுபானக் கடையில், புதிதாக அமல்படுத்தப்பட்ட காலி மதுபாட்டில்களைத் திரும்பப் பெற்று ஸ்கேன் செய்யும் நடைமுறை செயல்படுத்தப்பட்டது. அப்போது ஏற்பட்ட காலதாமதத்தால் ஆத்திரமடைந்த சில மதுப்பிரியர்கள், மதுபாட்டில்களை டாஸ்மாக் கடையின் மீது வீசி உடைத்தனர். இதனால் அங்கு பணியில் இருந்த ஊழியர்கள் அச்சமடைந்தனர். தகவலறிந்த சாணார்பட்டி போலீஸ் இன்ஸ்பெக்டர் பிரபாகரன் சம்பவ இடத்திற்கு நேரில் சென்று விசாரணை மேற்கொண்டார். இதை தொடர்ந்து கோபால்பட்டி, உலுப்பகுடி, செங்குறிச்சி உள்ளிட்ட பகுதிகளில் செயல்பட்டு வந்த அரசு டாஸ்மாக் மதுபானக் கடைகளின் ஊழியர்கள் பாதுகாப்பு கருதி கடைகளை மூடிவிட்டுச் சென்றனர்.
