பக்தர்களுக்கு சிற்றுண்டி பை; : பழநி கோயில் நிர்வாகம் ஏற்பாடு
பக்தர்களுக்கு சிற்றுண்டி பை; : பழநி கோயில் நிர்வாகம் ஏற்பாடு
ADDED : ஜன 27, 2026 09:57 AM
பழநி: தைப்பூச விழாவை முன்னிட்டு பக்தர்களுக்கு பல்வேறு வசதிகளை ஏற்படுத்தி தரும் கோயில் நிர்வாகம் விழாவின் 7, 8 ம் நாள் திருவிழாவில் குடமுழுக்கு நினைவரங்கம் வழியாக படி ஏறி வரும் பக்தர்களுக்கு பிஸ்கட், இனிப்பு, பலகாரம், தண்ணீர் பாட்டில் அடங்கிய சிற்றுண்டி பைகள் வழங்கப்பட உள்ளது.
பழநி முருகன் கோயில் தைப்பூசத் திருவிழா நேற்று துவங்கிய நிலையில் பிப். 4 வரை 10 நாட்கள் விழா நடை பெறுகிறது.
ஏராளமான பக்தர்கள் பாதயாத்திரையாக பல்வேறு பகுதிகளில் இருந்து வருகின்றனர்.
இதை தொடர்ந்து கோயில் நிர்வாகம் சார்பில் திருவிழா நடை பெறும் பத்து நாட்களுக்கு மேற்கு கிரிவீதியில் வின்ச் ஸ்டேஷன், தெற்கு கிரி வீதியில் நாதஸ்வர பள்ளி என இரு இடங்களில் தன்னார்வலர்கள் மூலம் நாள் முழுவதும் அன்னதானம் வழங்கப்படுகிறது.
பழநி முருகன் கோயிலில் நாள் முழுவதும் கலவை சாத அன்னதானம் காலை 10:00 முதல் மாலை 6:00 மணி வரை 10 ஆயிரத்திற்கு மேற்பட்ட பக்தர்களுக்கு வழங்கபடஉள்ளது.
பாதயாத்திரை பக்தர்களுக்கு வசதியாக தைப்பூச திண்டுக்கல் ரோட்டில் ஒட்டன்சத்திரம், குழந்தை வேலப்பர் கோயில் ஓய்வு கூடத்தில் நாள் ஒன்றுக்கு 16 ஆயிரம் பக்தர்கள், தாராபுரம் ரோட்டில் கொங்கூர் பக்தர்கள் ஓய்வு கூடத்தில் நாளொன்றுக்கு 4000 பக்தர்கள் வீதம் தினமும் 20 ஆயிரம் பக்தர்களுக்கு அன்னதானம் வழங்கப் படுகிறது.
பழநி முருகன் கோயிலின் பஞ்சாமிர்த பிரசாதம் கோயிலில் நாள் முழுவதும் இலவசமாக வழங்கப்படும் நிலையில் தெற்கு வெளி பிரகாரத்தில் காலை 7:00 மணி முதல் இரவு 9:00 மணி வரை கை குழந்தைகளுக்கு காய்ச்சிய பால், படிப்பாதை, யானை பாதை இணையும் இடத்தில் நாள் முழுவதும் சுக்கு காபி, பக்தர்கள் தரிசனம் செய்ய காத்திருக்கும் வரிசை, காத்திருப்பு கூடத்தில் கோயில் சார்பாக பிஸ்கட், தண்ணீர் பாட்டில்கள் வழங்கப் படுகிறது.
விழாவின் ஏழாம் நாள், எட்டாம் நாள் திருவிழாவில் குடமுழுக்கு நினைவரங்கம் வழியாக படி ஏறி வரும் லட்சக்கணக்கான பக்தர்களுக்கு பிஸ்கட், இனிப்பு, பலகாரம், தண்ணீர் பாட்டில் அடங்கிய சிற்றுண்டி பைகள் படி ஏறுவதற்கு முன்பே வழங்கப்பட உள்ளதாக கோயில் நிர்வாகம் தெரிவித்துள்ளது.
