ஊராட்சிகளில் திடக்கழிவு மேலாண்மை திட்டம் முடக்கம் : ரோட்டோரங்களில் குப்பையை கொட்டி எரிப்பு
ஊராட்சிகளில் திடக்கழிவு மேலாண்மை திட்டம் முடக்கம் : ரோட்டோரங்களில் குப்பையை கொட்டி எரிப்பு
UPDATED : மார் 14, 2026 07:49 AM
ADDED : மார் 14, 2026 07:48 AM

கொடைக்கானல்:திண்டுக்கல் மாவட்டத்தில் ஊராட்சிகளில் திடக்கழிவு மேலாண்மை திட்டம் முடங்கியுள்ளது. ரோட்டோரம் குப்பையை கொட்டி தீ வைத்து எரிப்பதால் குடியிருப்போர், வாகன ஓட்டிகள் அவதியுறுகின்றனர்.
மாவட்டத்தில் 306 ஊராட்சிகள் உள்ளன. பெரும்பாலான ஊராட்சிகளில் தூய்மை பணியாளர் பணியிடங்கள் காலியாகவே உள்ளன. ஏற்கனவே உள்ளோர் கூடுதலாக கவனிக்கும் நிலை உள்ளது. திடக்கழிவு மேலாண்மை திட்டத்தில் மக்கும், மக்காத குப்பை தரம் பிரிக்கும் பணியும் கேள்விக்குறியாகவே உள்ளது.
![]() |
இச்சூழலில் ஊராட்சிகளில் சேகரிக்கப்படும் குப்பை ரோடு, குடியிருப்பு பகுதியில் குவிக்கப்பட்டு தீ வைத்து எரிக்கப்படுகிறது. இதனால் பொதுமக்கள் சுவாசக்கோளாறால் அவதியுறுகின்றனர். வாகன ஓட்டிகள் நிலை தடுமாறி செல்கின்றனர். பிளாஸ்டிக் எரிக்கப்படும் போது நச்சுத்தன்மை வாய்ந்த புகையால் சுற்றுச்சூழல் பாதிக்கும் அபாயம் உள்ளது. மின் கம்பம், டிரான்ஸ்பார்மர் அருகிலும் விபத்து அபாயம் உணராமல் தீ வைத்து குப்பை எரிக்கப்படுகிறது. இதுபோன்று மாவட்டம் முழுவதும் அனைத்து ஊராட்சிகளிலும் காண முடிகிறது.
கோடை வெயில் தாக்கத்தில் குப்பை தீ வைத்து எரிக்கப்படுவதால் கொழுந்துவிட்டு எரிந்து அருகில் உள்ள வீடு, விவசாய நிலம், வனங்களில் தீ விபத்துகளை ஏற்படுத்தும் சூழல் உள்ளது. உள்ளாட்சி அமைப்புகள் கலைக்கப்பட்டதால் தற்போது தனி அலுவலர்கள் வசமே நிர்வாகம் உள்ளது.
எனவே மாவட்ட நிர்வாகம் ரோட்டோரம் குப்பை தீ வைத்து எரிக்கப்படுவதை தவிர்த்து அவற்றை திடக்கழிவு மேலாண்மை மூலம் பராமரிக்க நடவடிக்கை எடுக்க வேண்டும்.
ஊராட்சிகளில் தொடரும் அவலம்
ஊரகப் பகுதிகளில் ரோட்டோரம் குப்பை கொட்டி தீ வைத்து எரிக்கப்படுவது தொடர்கிறது. இதனால் மக்கள் வெகுவாக பாதிக்கின்றனர். ஊராட்சி நிர்வாகம் மூலம் செயல்படுத்தப்படும் திடக்கழிவு மேலாண்மை திட்டம் முடங்கி உள்ளது. இத்திட்டத்தை மீண்டும் உயிர்ப்பிக்கும் பட்சத்தில் இதுபோன்ற தீ வைப்பு சம்பவங்கள் குறையும். இதுகுறித்து மாவட்ட அதிகாரிகள் ஆய்வு செய்ய வேண்டும். புகார் தெரிவிக்க அலைபேசி எண்ணை மக்கள் பார்வைக்கு வைக்க வேண்டும்.
- பாலசுப்ரமணி, இயற்கை ஆர்வலர்.

